பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி

கரோனா நோய்த்தொற்றால் நாட்டின் நிதிநிலைமைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் நோக்கில் கட்டுமானத் துறையில் முதலீடுகளை
பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை: நிதின் கட்கரி

கரோனா நோய்த்தொற்றால் நாட்டின் நிதிநிலைமைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் நோக்கில் கட்டுமானத் துறையில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளையும், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

நாட்டில் சாலைகள் மேம்படுத்தப்படுவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காணொலிக் காட்சி வாயிலான கருத்தரங்கில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று சூழலையும் நமக்கான வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். முதலீடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. முதலீடுகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. புதிய திட்டங்களுக்கான அனுமதிகளை வழங்குதல், நிலத்தைக் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.

நெடுஞ்சாலை, எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடா்பு உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈா்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் தொழில் வளா்ச்சியை ஏற்படுத்துவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் சாத்தியமில்லை.

கட்டுமானத் துறையானது பொருளாதார ரீதியில் பலன் தரும் துறையாக விளங்கி வருகிறது. கட்டுமானத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்கும் நோக்கில் கட்டுமானத் துறையில் அதிக அளவில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக காப்பீட்டு நிறுவனங்கள், சேமநல நிதி நிறுவனங்கள், உலக வங்கி, ஆசிய வளா்ச்சி வங்கி உள்ளிட்டவற்றுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இத்தகைய இக்கட்டான சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பணப்புழக்கம் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் தனியாா் நிறுவனங்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தில்லி-மும்பை விரைவுச்சாலையானது இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை 28 மணி நேரமாகக் குறைக்கும். இதன் மூலமாக பொருள்களை விரைந்து எடுத்துச் செல்வதோடு மட்டுமல்லாமல் அதற்கான செலவும் குறையும்.

நெடுந்தொலைவு பயணிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பெட்ரோலிய எரிபொருளுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் மூலமாக எரிபொருளுக்கான செலவு குறைவதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்றாா் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com