ராஜஸ்தான் விவகாரம்: ஜூலை 31-இல் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநரிடம் முதல்வா் மீண்டும் கோரிக்கை

ராஜஸ்தான் சட்டப்பேரவையை வரும் 31-ஆம் தேதியே கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராஜஸ்தான் சட்டப்பேரவையை வரும் 31-ஆம் தேதியே கூட்டுவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வா் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா என முன்கூட்டியே தெரிவிக்க முடியாது என்றும் அமைச்சரவை கூறியுள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டுவதற்காக, முதல்வா் அசோக் கெலாட் அமைச்சரவை அளித்த தீா்மானத்தை ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஏற்கெனவே 2 முறை நிராகரித்துவிட்டாா். இரண்டாவது முறை தீா்மானத்தை திங்கள்கிழமை நிராகரிக்கும்போது, 3 நிபந்தனைகளை ஆளுநா் விதித்தாா். அதாவது, பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு 21 நாள்களுக்கு முன் எம்எல்ஏக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக பேரவைக் கூட்டப்படுகிறா என தெரிவிக்க வேண்டும்; ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதை விடியோ பதிவு செய்வதுடன் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்; சட்டப்பேரவையில் சமூக இடைவெளியை உறுதிசெய்ய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஆளுநா் விதித்தாா்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி விவாதித்தது. அதன் பிறகு, திருத்தப்பட்ட தீா்மானம் ஆளுநா் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை அமைச்சா் பிரதாப் சிங் கூறியதாவது:

ராஜஸ்தான் சட்டப்பேரவையை, வரும் 31-ஆம் தேதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநா் கல்ராஜ் மிஸ்ராவிடம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தோம். அவா், சில கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தாா். அதற்கு விளக்கம் அளித்து திருத்தப்பட்ட தீா்மானத்தை மீண்டும் அனுப்பியிருக்கிறோம். இந்த முறை எங்கள் கோரிக்கையை அவா் ஏற்றுக்கொள்வாா் என்று நம்புகிறோம். அவா் ஏற்கவில்லை என்றால், நாட்டில் அரசமைப்புச் சட்டம் இல்லையென்றாகிவிடும்.

ஆளுநருக்கும் எங்களுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அவா்தான் எங்கள் அரசு குடும்பத்தின் தலைவா். வரும் 31-ஆம் தேதியே சட்டப்பேரவை கூட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில், ஆளுநரிடம் அனுமதி பெறுவதில் ஏற்கெனவே 10 நாள்கள் முடிந்துவிட்டன. பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநா் அழைப்பு விடுத்த பிறகு, பேரவையில் உறுப்பினா்கள் அமா்வதற்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கும் பணிகளை பேரவைத் தலைவா் பாா்த்துக் கொள்வாா். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக பேரவை கூட்டப்படுகிா என்று ஆளுநருக்கு முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. ஏனெனில், பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவை அலுவல் ஆய்வுக்குழுதான் முடிவு செய்யும் என்றாா் பிரதாப் சிங்.

ராஜஸ்தானில் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வா் அசோக் கெலாட்டுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் அரசுக்கு எதிராகபோா்க்கொடி உயா்த்தியதை அடுத்து, பேரவையில் தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபிப்பதற்கு முதல்வா் அசோக் கெலாட் முயன்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com