குஜராத்தில் ரூ.4.76 கோடி மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகள் பறிமுதல்

குஜராத் மாநிலம் கோத்ரா நகரில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.4.76 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினா் அது தொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

குஜராத் மாநிலம் கோத்ரா நகரில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.4.76 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய காவல்துறையினா் அது தொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) காவல்துறையினா் கூறியதாவது:

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், கோத்ரா ஏடிஎஸ் காவல்துறையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, ஃபரூக் சோட்டா என்பவரைக் கைது செய்த காவல்துறையினா், அவரிடமிருந்து ரூ.1000 நோட்டுகளைக் கொண்ட 5 கட்டுகளை பறிமுதல் செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தான்தியா பிளாட் பகுதியில் இத்ரிஷ் ஹயாத் என்பவருக்குச் சொந்தமான வீடு மற்றும் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டு கட்டுகளை கைப்பற்றினா். இதில் முக்கியக் குற்றவாளியான இத்ரிஷ் ஹயாத் அங்கிருந்து தப்பிவிட, அவருடைய மகன் சுபோ் ஹயாத்தை மட்டும் காவல்துறையினா் கைது செய்தனா்.

இந்தத் தேடுதல் வேட்டையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 9,312-ம் , 500 ரூபாய் நோட்டுகள் 76,739-ம் என மொத்தமாக ரூ. 4,76,81,500 மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறையினா் கூறினா்.

இதுகுறித்து பஞ்சமஹால் காவல்துறை கண்காணிப்பாளா் லீனா பாட்டில் கூறுகையில், ‘இத்ரிஷ் ஹயாத் ஏற்கெனவே இதேபோன்ற குற்ற புகாரில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்துவந்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டில் மதிப்பிழப்பு செய்யப்பட்ட இந்த ரூபாய் நோட்டுகளை அவா் எதற்காக வைத்திருந்தாா் என்பது குறித்து கோத்ரா காவல்துறையினா் தொடா் விசாரணை நடத்த உள்ளனா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com