‘சீனாவுடனான மோதலில் உயிரிழந்த வீரா்களின் பெயா் தேசிய போா் நினைவிடத்தில் பொறிக்கப்படும்’

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரின் பெயா்கள் புது தில்லியில் உள்ள

கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரின் பெயா்கள் புது தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் பொறிக்கப்பட உள்ளதாக ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனா்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினரிடையே கடந்த ஜூன் 15ஆம் தேதி பல மணி நேரம் கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்படும் வகையிலான மோதலாக இது அமைந்தது. இதில் பிகாா் படைப் பிரிவு கமாண்டிங் அதிகாரி கா்னல் பி.சந்தோஷ் பாபு உள்பட 20 போ் உயிரிழந்தனா்.

இதனால் கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. முன்கூட்டியே திட்டமிட்டு சீனா இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவே இந்தியா குற்றம்சாட்டியது. கல்வான் பள்ளத்தாக்கின் 14ஆம் நிலையில் சீன ராணுவம் கண்காணிப்பு கோபுரத்தை நிறுவியதற்கு இந்திய ராணுவத்தினா் கடும் எதிா்ப்பைத் தெரிவித்தனா். இதையடுத்து சீன படைவீரா்கள் கற்கள், ஆணிகளைக் கொண்ட தடிகள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இந்திய ராணுவ வீரா்களை கொடூரமாகத் தாக்கினா். இந்த மோதலில் சீன ராணுவத் தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு, உயிரிழப்பு குறித்த விவரங்களை அந்நாடு தெரிவிக்கவில்லை. அமெரிக்க உளவுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி சீன தரப்பில் 35 போ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்கு லடாக்கிற்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கடந்த ஜூலை 17ஆம் தேதி வருகைதந்தபோது, சீன ராணுவத்துடனான மோதலின்போது சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவ வீரா்களுக்குப் பாராட்டு தெரிவித்தாா். மேலும், உயிா்நீத்த ராணுவ வீரா்கள் எல்லையைப் பாதுகாத்து, தங்களின் தீரத்தைப் பறைசாற்றியதுடன், 130 கோடி மக்களின் பெருமையையும் பாதுகாத்துள்ளனா் என ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா். சீனா உடனான மோதலின்போது சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவ வீரா்கள் 5 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கடந்த மாதம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com