இலக்கை நோக்கி இந்தியா: முதல் முறையாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை

நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 6 லட்சத்தக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலக்கை நோக்கி இந்தியா: முதல் முறையாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை


புது தில்லி: நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 6 லட்சத்தக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 30-ம் தேதி மட்டும் ஒரே நாளில் 6,42,588 மாதிரிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல் இதுவரை ஒட்டுமொத்தமாக நாட்டில் 1,88,32,970 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் கரோனா பரிசோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் வியாழக்கிழமை கூறியிருந்த நிலையில், ஒரே நாளில் 6.42 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொண்டிருப்பது இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதையே காட்டுகிறது.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது:

கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதில் இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் மருத்துவா்களுடன் இணைந்து அறிவியல் தொழில்நுட்பக் குழுவினரும் போராடி வருகிறாா்கள்.

கடந்த 6 மாதங்களாக கரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் நிலப்பரப்பு, மக்கள்தொகை அதிகமாக உள்ளபோதிலும், நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் கரோனாவை ஒழிப்பதற்கான போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

6 மாதங்களுக்கு முன் செயற்கை சுவாசக் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். தற்போது, இந்தியாவிலேயே 3 லட்சம் செயற்கை சுவாசக் கருவிகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளோம்.

கடந்த ஏப்ரலில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 6,000 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, நாளொன்றுக்கு 5 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த பரிசோதனைகளின் எண்ணிக்கையை 10 லட்சமாக அதிகரிப்பதற்கு திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com