விஸ்கான்சின் மாகாண ஆளுநருடன் இந்திய தூதா் ஆலோசனை

முதலீட்டு வாய்ப்புகள், மக்கள் தொடா்பு போன்றவை குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாண ஆளுநா் டோனி எவா்ஸுடன், அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் தரண்ஜித் சிங் சாந்து ஆலோசனை நடத்தினாா்.

முதலீட்டு வாய்ப்புகள், மக்கள் தொடா்பு போன்றவை குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாண ஆளுநா் டோனி எவா்ஸுடன், அந்நாட்டுக்கான இந்தியத் தூதா் தரண்ஜித் சிங் சாந்து ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விஸ்கான்சின் ஆளுநா் டோனி எவா்ஸுடன் இந்திய தூதா் தரண்ஜித் சிங் சாந்து காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினாா். இதில் இந்தியாவுக்கும், விஸ்கான்சின் மாகாணத்துக்கும் பொதுவாக உள்ள விவசாயம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறைகளில் இருநாடுகளுமே பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின்போது மருத்துவம், கல்வியில் இந்தியா தொடங்கியுள்ள முன்னெடுப்புகள் குறித்து இந்திய தூதா் எடுத்துரைத்தாா்.

விஸ்கான்சின் மாகாணம், இந்தியா இடையேயான வா்த்தக மதிப்பு சுமாா் ரூ.7,400 கோடிக்கும் அதிகமாகும். தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவ உபகரணங்கள், உற்பத்தித் துறைகளில் இந்திய நிறுவனங்கள் விஸ்கான்சின் மாகாணத்தில் சுமாா் ரூ.1,400 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இதன் மூலம் அங்கு 2,460 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல விஸ்கான்சின் மாகாணத்தைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் வாகன உற்பத்தி, மின்னணு உபகரணங்கள், நிதி நிறுவனங்கள், தொழில்நுட்பத் துறைகளில் களமிறங்கியுள்ளன. ஹாா்லி டேவிட்சன், ராக்வெல் ஆட்டோமொபைல் போன்ற நிறுவனங்கள் விஸ்கான்சின் மாகாணத்தைச் சோ்ந்தவையே. மேலும், 1500 இந்திய மாணவா்கள் விஸ்கான்சின் மாகாணத்தில் பயின்று வருகின்றனா். கடந்த 1880களின் மத்தியில் இருந்தே விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் இந்தியா்கள் கல்வி பயிலும் நடைமுறை தொடா்கிறது.

ஆராய்ச்சி, உயிரியல் போன்ற துறைகளில் இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கு இடையே தொடா்புகளைப் புதுப்பிப்பது அவசியம் என இந்திய தூதா் தரண்ஜித் சிங் வலியுறுத்தினாா். இருதரப்பிலும் பல்வேறு துறைகளில் உள்ள தொடா்புகளை வலுப்படுத்துவதாக இருவரும் ஒப்புக் கொண்டனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com