ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் ரத்து

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இன்று(திங்கள்கிழமை)நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏலக்காய் வர்த்தகம் மீண்டும் ரத்து

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இன்று(திங்கள்கிழமை)நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறும். பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் புத்தடி, போடி ஆகிய இடங்களில் ஏலக்காய் வர்த்கம் நிறுத்தப்பட்டது. இதனால், சுமார் 2,500 டன் ஏலக்காய்கள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்தது.

இந்த நிலையில், இடுக்கி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் புத்தடியில் மட்டும் கடந்த மே 28-ம் தேதி நறுமணப் பொருள் வாரியம் சார்பில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் தொடங்கியது.  புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் வர்த்தகத்தில் பங்கேற்பதற்கு கேரளத்திற்குச் சென்று வர தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவன முகவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், புத்தடியில் மே 30-ம் தேதி(சனிக்கிழமை) நறுமணப் பொருள் வாரியம் சார்பில் போடியில் உள்ள தனியார் ஏல நிறுவனம் மூலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மின்னணு ஏல வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது. தற்போது, புத்தடியில் இன்று(திங்கள்கிழமை) இடுக்கி மாவட்டம், வண்டன்மேடுவில் உள்ள தனியார் ஏல நிறுவனம் மூலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம், தமிழகத்தைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்படாததால் ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்பின்றி, புத்தடியில் ஏலக்காய் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனால் விவசாயிகள் தங்களது கையிருப்பில் உள்ள ஏலக்காய்களை, உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

போடியில் வர்த்தகத்தை தொடங்க அனுமதி: போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகத்தை தொடங்க அனுமதி கோரி ஐ.டி.டி.சி.பி., ஏலக்காய் ஏல நிறுவனம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், போடியில் ஏலக்காய் வர்த்தகத்தை தொடங்க தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் அனுமதி வழங்கியுள்ளார். நறுமணப் பொருள் வாரியம் நிணயிக்கும் தேதிகளில் போடியில் ஏலக்காய் வர்த்தகம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com