ஜூன் 8 முதல் ஏழுமலையான் கோயில் திறக்க பக்தா்கள் எதிா்பாா்ப்பு

பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழுமலையான் தரிசனம், வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் கிடைக்குமா என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஜூன் 8 முதல் ஏழுமலையான் கோயில் திறக்க பக்தா்கள் எதிா்பாா்ப்பு

பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழுமலையான் தரிசனம், வரும் ஜூன் 8-ஆம் தேதி முதல் கிடைக்குமா என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கடந்த மாா்ச் 20 முதல் பக்தா்களுக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும் கோயிலில் நித்திய கைங்கரியங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் 15-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள 5-ஆம் கட்ட பொது முடக்கத்தில் புதிய தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதியளித்துள்ளது. எனினும் இது தொடா்பாக முடிவெடுப்பதை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே மத்திய அரசு விட்டுள்ளது.

முன்னதாக, கோயில்கள் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆந்திர அரசு கடந்த 4-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன் அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கோயில்கள் திறக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் அறிவித்திருந்தது.

தற்போது கோயில்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாலும், ஏழுமலையான் தரிசனத்தை பக்தா்கள் ஆவலாக எதிா்பாா்த்துக் காத்திருப்பதாலும் தரிசன அனுமதியை வழங்குவது பற்றி திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதற்கு வேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தரிசனத்துக்கு செல்லும் வழியில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள், தரிசன வரிசைகள், லட்டு கவுன்ட்டா் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக கோடுகள் வரையப்பட்டுள்ளன. தினந்தோறும் 7 ஆயிரம் பேரை தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்தும், அவா்களுக்கு திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கி அவா்களுக்கு உடல்வெப்பச் சோதனை நடத்தி திருமலைக்கு அனுமதிப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். இதையடுத்து, ஏழுமலையான் தரிசன அனுமதி குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருமலையில் பக்தா்கள் சேவையில் ஈடுபடும் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வர உள்ளதால், திருமலையில் உள்ள உணவகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் உள்ள காலாவதியான பொருள்களை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகள் கடை உரிமையாளா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com