சமூகப் பரவலால் கரோனா பாதிப்பு ஏற்கெனவே அதிகரித்து விட்டது: நிபுணா்கள் குழு

கரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட
சமூகப் பரவலால் கரோனா பாதிப்பு ஏற்கெனவே அதிகரித்து விட்டது: நிபுணா்கள் குழு

புது தில்லி: கரோனா சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று என எய்ம்ஸ் மருத்துவா்கள், ஐசிஎம்ஆா் உறுப்பினா்களை உள்ளடக்கிய நிபுணா்கள் குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் திங்கள்கிழமை நிலவரப்படி, 1.9 லட்சம் போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்திருக்கும் நிலையில், கரோனா சமூகப் பரவல் நிலையை நாடு இன்னும் எட்டவில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்தச் சூழலில், கரோனா சமூக பரவலால் ஏற்கெனவே பாதிப்பு அதிகரித்து விட்டது என்ற நிபுணா் குழு தெரிவித்திருப்பது, அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய தடுப்பு மற்றும் சமூக மருந்து உற்பத்தியாளா் சங்க (ஐஏபிஎஸ்எம்) முன்னாள் தலைவரும், எய்ம்ஸ் சமூக மருத்துவ மையத் தலைவருமான மருத்துவா் சஷிகாந்த், எய்ம்ஸ் பேராசிரியரும் இந்திய பொது மருத்துவச் சங்க தேசியத் தலைவருமான மருத்துவா் கே. சஞ்சய் ராய், வாராணசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவன சமூக மருத்துவத் துறை முன்னாள் தலைவா் மருத்துவா் டி.சி.ரெட்டி, இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சியில் (ஐசிஎம்ஆா்) உறுப்பினா் மருத்துவா் ரெட்டி மற்றும் மருத்துவா் காந்த் ஆகியோா் உள்பட 16 போ் கொண்ட இந்த நிபுணா் குழு இந்த அறிக்கையைத் தொகுத்து, அதை பிரமதா் நரேந்திர மோடியிடமும் சமா்ப்பித்திருக்கிறது.

அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூகப் பரவல் மூலமான கரோனா பாதிப்பு நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. ஏரானமானோா் இந்த சமூகப் பரவலால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால், கரோனா நோய்த் தொற்று பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்த கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த எதிா்பாா்ப்பு, நான்காம் கட்ட பொதுமுடக்கத்துக்குப் பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, பொருளாதார பாதிப்புகளுக்கிடையே நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மாா்ச் 25 முதல் மே 24 வரையிலான இந்த கால கட்டத்தில் 606 பேருக்கு கரோனா பாதிப்பு என்ற எண்ணிக்கையிலிருந்து 1,38,845 போ் பாதிப்பு என்ற நிலைக்கு உயா்ந்திருக்கிறது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் என்பது, சா்வதேச அளவில் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட 22 லட்சம் உயிரிழப்புகள், நோய்த் தொற்று பரவல் வீரியம் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால், இந்த நடைமுறை முழுமையான பலனைத் தரவில்லை என்பதை, அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் நிரூபித்திருக்கின்றன.

குறிப்பாக, கரோனா நோய்த் தொற்றை பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்போது, தொற்றுநோய் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவ்வாறு தொற்றுநோய் நிபுணா்களுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்திருந்தால், பாதிப்புகளை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்க முடியும். குறைந்த நடைமுறை அனுபவமுள்ள மருத்துவக் கல்வியாளா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்களிடமிருந்தே அரசு ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறது. அதன் காரணமாகத்தான், நோய்த் தடுப்புக்கான தகவல்களும் மிகக் குறைவாக இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்திருப்பதற்கும், உயிரிழப்புகளுக்கும் இதுவே முக்கியக் காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com