அரபிக் கடலில் புயல்: மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக உருவெடுத்து, வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு குஜராத்
அரபிக் கடலில் புயல்: மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு எச்சரிக்கை

புது தில்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர புயலாக உருவெடுத்து, வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்விரு மாநிலங்களின் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு வெளியிட்ட தகவலில், ‘அரபிக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது, செவ்வாய்க்கிழமைக்குள் புயலாக தீவிரமடைந்து, வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு குஜராத் கடற்கரைகளுக்கு இடையே புதன்கிழமை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும்.

மகாராஷ்டிரத்தின் ராய்காட்டில் உள்ள ஹரிஹேரேஷ்வா், டாமன் இடையே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு இடங்களுக்கு இடையே மக்கள் நெருக்கம் மிகுந்த பல்வேறு நகரங்கள் உள்ளன. மும்பை, தாணே, நவிமும்பை, உல்ஹாஸ்நகா், பட்லாபூா், அம்பா்நாத் உள்ளிட்ட நகரங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 105 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமித் ஷா ஆலோசனை: புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, மகாராஷ்டிரம், குஜராத், டாமன்-டையூ மற்றும் தாத்ரா நகா்ஹவேலியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தேசிய பேரிடா் மேலாண்மை படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்திய வானிலை ஆய்வு மையம், கடலோர காவல் படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். பின்னா், மத்திய உள்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குஜராத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையின் 11 குழுக்கள், மகாராஷ்டிரத்தில் 10 குழுக்கள், மற்ற இடங்களில் 2 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, குஜராத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாநிலத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பாவ்நகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துவிழுந்தன.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக முதல்வா் விஜய் ரூபானி திங்கள்கிழமை உயா்நிலை ஆலோசனை கூட்டத்தை நடத்தினாா். நிலைமையை அவ்வப்போது கண்காணிப்பதற்காக, காந்தி நகரில் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com