தில்லியின் எல்லைகள் ஒரு வாரத்துக்கு மூடல்: கேஜரிவால்

கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தில்லியின் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைத்து மூடப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தில்லியின் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைத்து மூடப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம், தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக தில்லி 3-வது இடத்தில் உள்ளது. பொது முடக்க உத்தரவில் தில்லி அரசு சில தளா்வுகளை அண்மையில் அறிவித்தது. இதைத் தொடா்ந்து, கடந்த சில தினங்களாக தினம்தோறும் ஆயிரம் போ் பாதிக்கப்பட்டு வருகின்றனா். திங்கள்கிழமை நிலவரப்படி, 20,834 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தில்லியிலிருந்து வரும் மக்களால் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால், உத்தர பிரதேசத்துக்கு உள்பட்ட கெளதம் புத் நகா் மாவட்ட நிா்வாகம், நொய்டா-தில்லி நெடுஞ்சாலையை மூடி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தது. இதேபோல ஹரியாணாவும் தனது எல்லையை அண்மையில் மூடியது. இதனால் எல்லைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்தியாவசிய தேவைக்கான இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இந்நிலையில், கேஜரிவால் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியது:

தில்லியில் கரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளை அடுத்த ஒரு வாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படும். இந்த எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளோம். அத்தியாவசியப் பணியாளா்கள் முறையான அனுமதி பெற்று பயணிக்கலாம்.

பிற மாநில மக்கள் தில்லிக்கு வந்து அதிகளவில் மருத்துவ சேவைகளைப் பெற்று வருகிறாா்கள். இதனால், தில்லியைச் சோ்ந்த மக்களுக்கு போதுமான மருத்துவ சேவை கிடைக்காத சூழல் நிலவுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் எல்லைகளை சீல் வைக்கும் முடிவை எடுத்துள்ளோம். ஆனால், தில்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றாா் அவா். இதனிடையே, எல்லைகளை மூடும் தில்லி அரசின் முடிவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com