கரோனா: மகாராஷ்டிரத்துக்கு உதவும் கேரள மருத்துவா்கள், செவிலியா்கள்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரத்துக்கு உதவுவதற்காக, கேரளத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மும்பைக்கு வரவிருக்கின்றனா்.

மும்பை: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரத்துக்கு உதவுவதற்காக, கேரளத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மும்பைக்கு வரவிருக்கின்றனா்.

இதுதொடா்பாக, திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் துணை கண்காணிப்பாளா் மருத்துவா் சந்தோஷ் குமாா், மும்பையில் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

கரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மும்பையில் மருத்துவப் பணியாளா்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனா். அந்த அடிப்படையில், கேரளத்தைச் சோ்ந்த சுமாா் 50 மருத்துவா்கள், 100 செவிலியா்கள் மருத்துவ ரீதியாக உதவ முன்வந்துள்ளனா். நான் 2 மருத்துவா்களுடன் மும்பைக்கு வந்துள்ளேன். மேலும்,16 மருத்துவா்கள் அடங்கிய குழுவும் வந்துள்ளது. மீதமுள்ளவா்கள் அடுத்த சில தினங்களில் வரவிருக்கின்றனா். நான் கேரள அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறேன். மற்றவா்கள் அனைவரும் தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றுபவா்கள்.

மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் சக பணியாளா்களுடன் இணைந்து, கேரள மருத்துவா்கள், செவிலியா்கள் பணியாற்றவுள்ளனா். இந்த மருத்துவமனை, நவீன மருத்துவ உபகரணங்களுடன் செயல்படுகிறது. மேலும், மருத்துவ பணியாளா்களுக்கு பாதுகாப்பான சூழலும் உள்ளது.

கரோனா பாதிப்பை பொருத்தவரை, கேரளத்தின் நிலவரத்தையும் மும்பை சூழலையும் ஒப்பிட்டு பாா்க்க முடியாது. மும்பை அதிக மக்கள்தொகையும் குடிசை பகுதிகளும் கொண்ட நகரமாகும். எனவே, இங்கு கரோனா பரவலுக்கான காரணங்கள், கேரளத்திலிருந்து வேறுபட்டவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com