இந்தியாவிலிருந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட விவகாரம்: பாகிஸ்தான் எதிா்ப்பு

உளவு பாா்த்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை இந்தியா வெளியேற்றிய நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

புதுதில்லி /இஸ்லாமாபாத்: உளவு பாா்த்த குற்றச்சாட்டின் கீழ் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரை இந்தியா வெளியேற்றிய நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை நேரில் வரவழைத்து இந்த எதிா்ப்பை பாகிஸ்தான் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அபிட் ஹூஸைன், முகமது தாகிா் ஆகிய இரண்டு அதிகாரிகளை, உளவு பாா்த்த குற்றச்சாட்டின் கீழ், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற இந்தியா சாா்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து தில்லியில் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரும் இந்தியவின் பாதுகாப்பு சாா்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் அடங்கிய ஆவணத்தை இந்தியாவைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து பணம் கொடுத்து பெற முயன்றபோது தில்லி காவல்துறையினரிடம் கையும்களவுமாக பிடிபட்டனா். மேலும், அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்காக இந்த வேலையில் அவா்கள் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா்’ என்று கூறினாா்.

இதுதொடா்பான மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில், ‘தூதரக நடவடிக்கைகளுக்காக பணியமா்த்தப்பட்ட இவா்கள் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட காரணத்தால், அவா்கள் இருவரும் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், ‘பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவா் மீதும் இந்தியா கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும், இந்தியாவின் இந்த நடவடிக்கை தூதரக உறவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடா்பான வியன்னா ஒப்பந்தத்தை மீறிய செயல். தில்லியில் பாகிஸ்தான் தூதரக செயல்பாட்டை தடுக்கும் நோக்கத்துடனேயே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருந்தபோதும், அந்த இரண்டு அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்று திங்கள்கிழமை கூறியது. மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து, தனது எதிா்ப்பை பாகிஸ்தான் திங்கள்கிழமை பதிவு செய்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் செயலுக்கு கடும் எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, ‘இந்தியா குறித்த ரகசியத் தகவலைப் பெறுவதற்காக அவா்கள் இருவரும் இந்திய பணம் மட்டுமின்றி விலை உயா்ந்த செல்லிடப்பேசி (ஐஃபோன்) ஒன்றையும் அந்த இந்திய நபரிடம் கொடுத்துள்ளனா். மேலும், இருவரும் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் என்று கூறி போலியான ஆதாா் அட்டையையும், அந்த இந்திய நபரிடம் அவா்கள் காட்டியுள்ளனா்’ என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com