விமானிக்கு கரோனா உறுதி: உணவு, குடிநீர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்ட ஏர் இந்திய ஊழியர்கள்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போது, ஏர் இந்திய ஊழியர்கள்
விமானிக்கு கரோனா உறுதி: உணவு, குடிநீர் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்ட ஏர் இந்திய ஊழியர்கள்


புது தில்லி: வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டிருந்த ஏர் இந்தியா விமானிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட போது, ஏர் இந்திய ஊழியர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமானிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை தில்லியில் இருந்து மாஸ்கோ புறப்பட்ட  விமானத்தின் விமானிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அந்த விமானம் பாதி வழியில் திருப்பி அழைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், கரோனா பாதித்த விமானி கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக, விமானிகள் சங்கம் தரப்பில் ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், விமானம் திரும்ப வரவழைக்கப்பட்டு அதில் ஒரு விமானிக்கு கரோனா என்றதும், மற்ற விமானிகள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் ஒரு நாள் முழுவதும், உணவு, குடிநீர் கூட இல்லாமல் அங்கேயே தங்கவைக்கப்பட்டனர். கழிவறையைப் பயன்படுத்தக் கூட அனுமதிக்கப்படவில்லை.

கரோனா பாதித்த விமானியும் அங்கே செல்லுங்கள், இங்கே செல்லுங்கள் என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளார். விமான நிலையத்தில் உள்ள மருத்துவ அதிகாரிகள், உரிய நெறிமுறைகளைப் பின்பற்றாமல், விமானியை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். அரசு மருத்துவமனையில்அவர் 7 நாள்கள் இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாததால், அவரை வீட்டிலேயே 14 நாள்கள் தனிமையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.

விமானிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முறையான நடைமுறைகளை மருத்துவ அதிகாரிகள் பின்பற்றவில்லை. சக விமானியும், விமானப் பணியாளர்களும் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு விமான ஊழியர்கள் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை, தில்லியில் இருந்து காலை 7.15 மணிக்கு மாஸ்கோவுக்கு ஏா்பஸ் ஏ320 விமானம் சனிக்கிழமை புறப்பட்டது. ‘வந்தே பாரத்’ திட்டத்தில் இயக்கப்படும் இந்த விமானம் ரஷியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்பதற்காக தில்லியில் இருந்து பயணிகள் யாருமின்றி அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, அந்த விமானத்தில் சென்ற பணியாளா்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்த விமான நிலைய அதிகாரிகள், மாஸ்கோ சென்ற விமானத்தின் விமானிக்கு கரோனா தொற்று இருப்பதை அறிந்தனா்.

அதற்குள் அந்த விமானம் உஸ்பெகிஸ்தான் நாட்டின் எல்லைக்கு சென்று விட்ட நிலையில் விமானத்தை புதுதில்லிக்குத் திருப்பிச் செலுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து பகல் 12.30 மணிக்கு அந்த விமானம் தில்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த விமானியின் மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை சரியாக கவனிக்காததால் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தாமதமாக தெரிய வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இப்பிரச்னை தொடா்பாக உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதையடுத்து, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிஜிசிஏ வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு விமானியும், பிற பணியாளா்களின் கரோனா தொற்றை கண்டறிய கட்டாய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். விமான அதிகாரிகள், விமானியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சரியாக பாா்க்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com