இயன்றவரை நடு இருக்கையை காலியாக விடுங்கள்:  விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்று சூழலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் விமானங்களில் இயன்றவரை நடு இருக்கைகளை காலியாக விடுமாறு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வலியுறுத்தியுள்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று சூழலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் விமானங்களில் இயன்றவரை நடு இருக்கைகளை காலியாக விடுமாறு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வலியுறுத்தியுள்ளது. 

விமானங்களில் நடு இருக்கையை காலியாக விடுவது தொடர்பாக, பொது மக்களுக்கான பாதுகாப்பு அடிப்படையில் டிஜிசிஏ தனது விதிகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்று கடந்த மாதம் 25-ஆம் தேதி உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில், டிஜிசிஏ இவ்வாறு கூறியுள்ளது. 

இதுதொடர்பாக விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 
விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களில் முடிந்த வரையில் நடு இருக்கையில் பயணிகளை அமர்த்தாமல் காலியாக விடுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருக்கும் பட்சத்தில் நடு இருக்கையில் பயணிகள் அனுமதிக்கப்படலாம். அதில் அமரும் பயணிகளுக்கு 3 மடிப்புகள் கொண்ட முகக் கவசம், முகத்தை மூடும் வகையிலான பாதுகாப்பு கவசம் ஆகியவற்றோடு கூடுதலாக நீண்ட கவுன் போன்ற தற்காப்பு ஆடையும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் ஆடை ஜவுளித்துறை அமைச்சகத்தின் தரக் கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் நடு இருக்கையுடன் சேர்த்து அருகருகே அமர அனுமதிக்கப்படலாம். விமான நிறுவனங்கள் தங்களது பயணிகள் ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், முகத்தை மூடும் வகையிலான பாதுகாப்பு கவசம், போதுமான அளவு கை சுத்திகரிப்பான் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று டிஜிசிஏ தனது உத்தரவில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com