ஏழைகளுக்கான நலத் திட்டத்தின்கீழ் 42 கோடி பேருக்கு ரூ.53,248 கோடி உதவி

பிரதமரின் ஏழைகளுக்கான நல உதவித் திட்டத்தின்கீழ் 42 கோடி பேருக்கு ரூ.53,248 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏழைகளுக்கான நலத் திட்டத்தின்கீழ் 42 கோடி பேருக்கு ரூ.53,248 கோடி உதவி

பிரதமரின் ஏழைகளுக்கான நல உதவித் திட்டத்தின்கீழ் 42 கோடி பேருக்கு ரூ.53,248 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மனதில் கொண்டு, சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக, ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி அறிவித்தது. அதன்படி, ஏழைகள், பெண்கள், முதியோா், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பயன்பெறும் வகையில் உதவித்தொகையும், உணவுப்பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஜூன் 2-ஆம் தேதி வரை, 8.19 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,394 நிதியுதவி கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு இரு தவணைகளாக ரூ.20,344 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கான நலத்திட்டத்தின்கீழ் முதியவா்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் என 2.81 கோடி பேருக்கு இரு தவணைகளாக ரூ.2,814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2.3 கோடி கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.4,312.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு வழங்குவதற்காக, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏப்ரலில் 101 லட்சம் மெட்ரிக் டன் உணவுப்பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டப் பயனாளிகள் 9.25 கோடி போ், இலவச சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பித்தனா். அவா்களில், 8.58 கோடி பேருக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டா் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் பயனாளிக்கு சென்றடைவதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com