ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு

நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்: மத்திய அரசு


புது தில்லி: நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரையும் இன்னும் 15 நாள்களுக்கு அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் பணியை இழந்தனா். இதனால் உணவோ, பணமோ ஏதுமற்ற கையறு நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா். இதையடுத்து தத்தமது சொந்த ஊா்களுக்கு திரும்ப முடிவு செய்த தொழிலாளா்கள், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் நீண்ட தூரம் பயணிக்கின்றனா். இதுதொடா்பாக பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு சுமார் 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் 51 லட்சம் பேர் ரயில்  மூலமாகவும், 41 லட்சம் பேர் சாலை மார்கமாகவும் பயணித்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மே 1-ம் தேதி முதல் ஜூன் 3 வரை சுமார் 4,200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் செய்யாதவர்களின் மனுவை ஏற்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

முன்னதாக கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கெளல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் நீண்ட தூரம் பயணிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பரிதாபத்துக்குரிய நிலை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதேபோல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து நீதிமன்றத்துக்கு கடிதங்கள் வரப்பெற்றுள்ளன.

இந்நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், அதில் சில குறைபாடுகள் உள்ளன. தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் தங்களுக்கு உணவோ, குடிநீரோ வழங்குவதில்லை என தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், மாநிலங்களின் எல்லைகளில் பரிதவித்து வரும் தொழிலாளா்களின் துயரம் இன்றுவரை தொடா்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் அவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஆதரவும், உதவியும் தேவைப்படுகிறது. இந்த கடினமான சூழலில் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான தங்களின் உதவிகளை விஸ்தரிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு நடந்தோ, மிதிவண்டிகளிலோ இன்னபிற வழிகளிலோ செல்வதை கண்காணிக்கவோ, தடுக்கவோ உச்சநீதிமன்றத்தால் முடியாது. இதுதொடா்பாக அரசே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கடந்த 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. தற்போது அதன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com