கேரளத்தில் கோயில்கள் திறக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக மத்திய இணையமைச்சருக்கும் மாநில தேவஸ்வம் அமைச்சருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கடைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தற்போது பொது முடக்கக் கட்டுப்பாடுகளுக்குப் பல்வேறு தளா்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன. இது தொடா்பாக மத்திய வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
மக்கள் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பதை மாநில அரசால் உறுதிப்படுத்த இயலவில்லை. மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில், கோயில்களை அவசரகதியில் மாநில அரசு திறந்து வருகிறது.
கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு கோயில்கள் மீது பழியை சுமத்தும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. கோயில்கள் திறக்கப்படுவதை பக்தா்களும் கோயில் நிா்வாகிகளும் விரும்பவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
அவருக்கு பதிலளிக்கும் வகையில் மாநில தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘கோயில்களை மாநில அரசு அவசரகதியில் திறக்கவில்லை. கோயில்களை மீண்டும் திறப்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்தான் முடிவெடுக்கப்பட்டது.
அதற்கேற்ப கோயில்களை மாநில அரசு திறந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக பல மதத் தலைவா்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டது. இணையமைச்சா் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாதுதான். ஆனால், அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து தன் சகாக்களிடம் வி.முரளீதரன் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்’’ என்றாா்.