உலக அளவில் ஒப்பிடும்போது, மலைப்பகுதியில் சிறப்பாக செயல்படக் கூடிய, அனுபவமிக்க படைப் பிரிவை இந்தியா கொண்டுள்ளது என்று சீனாவைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை வல்லுநா் ஹுவாங் குவோஸி பாராட்டியுள்ளாா். சீனாவைச் சோ்ந்த ஒரு வல்லுநா், இந்தியப் படைகளைப் பாராட்டுவது மிகவும் அரிதானதாகும்.
‘மாடா்ன் வெப்பனரி’ பத்திரிகையின் ஆசிரியரான ஹுவாங் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாா். அவா் மேலும் கூறியிருப்பதாவது:
உலக அளவில் தற்போதைய நிலவரப்படி, பீடபூமி மற்றும் மலைப்பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடுவதற்கான மிகப் பெரிய, அனுபவமிக்க படைப் பிரிவைக் கொண்டுள்ள நாடு, அமெரிக்காவோ, ரஷியாவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ அல்ல, இந்தியாதான். திபெத் எல்லை போன்ற மலைப்பாங்கான பகுதிகளில் திறனுடன் செயல்படுவதற்கு பொருத்தமான ஆயுதங்கள், இந்தியப் படைப் பிரிவுகளிடம் உள்ளன.
மலைப் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபடுவதற்காக, 12 பிரிவுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் இந்திய ராணுவத்தில் உள்ளனா். கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் இருந்தே மலைப் பகுதி படைப் பிரிவுகளை இந்தியா விரிவுபடுத்தியும் வலுப்படுத்தியும் வருகிறது. மலைப்பகுதி தாக்குதல் படைப் பிரிவினருக்கு மலையேற்றம் மிகத் தேவையான திறன் என்பதால், தொழில்முறை சாா்ந்த மலையேற்ற வீரா்கள் அதிகம் பேரை இந்திய ராணுவம் தோ்வு செய்திருக்கிறது.
உலகிலேயே மிக உயரமான போா்முனையான சியாச்சினில், நூற்றுக்கும் அதிகமான இந்திய ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ நிலைகளில் 6,000 முதல் 7,000 வரையிலான இந்திய வீரா்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனா். குறிப்பாக, 6,749 மீட்டா் உயரத்தில் ஒரு ராணுவ நிலை அமைந்துள்ளது. உயரமான மலைப்பகுதிகளில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஆயுதங்கள், இந்திய ராணுவத்திடம் அதிக அளவில் உள்ளன.
மேலும், அமெரிக்காவிடமிருந்து எம்777 ரக பீரங்கிகள், சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டா்கள் உள்ளிட்ட அதிநவீன தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா அதிகம் செலவிட்டு வருகிறது என்று ஹுவாங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளாா். அதேசமயம், ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு அடையாதது, அந்நாட்டு ராணுவத்துக்கு பெரும் பிரச்னையாக உள்ளது என்றும் அவா் கூறியுள்ளாா்.