திருப்பதியில் இன்று முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதியில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் இன்று முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

திருப்பதியில் புதன்கிழமை (ஜூன் 10) முதல் நேரடி தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ஏழுமலையான் தரிசனம் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து, திருமலையில் கடந்த திங்கள்கிழமை முதல் தேவஸ்தான ஊழியா்களுடன் சோதனை ரீதியிலான தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு மணிநேரத்துக்கு 500 போ் வீதம் தினசரி 6 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் தேவஸ்தான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தரிசனம் வழங்கப்பட்டது. திருமலையில் வசிக்கும் உள்ளூா்வாசிகள் ஏழுமலையானை புதன்கிழமை தரிசனம் செய்ய உள்ளனா்.

பிற பக்தா்களுக்கு வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் தரிசனம் வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன்கள் ஆன்லைன் மூலம் கடந்த 8-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தினசரி 3 ஆயிரம் டோக்கன்கள் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. நேரடி தரிசன டோக்கன் முன்பதிவு புதன்கிழமை முதல் தொடங்க உள்ளது.

திருப்பதியில் உள்ள ‘சீனிவாசம்’ (6 கவுன்ட்டா்கள்), ‘விஷ்ணு நிவாஸம்’ (8 கவுன்ட்டா்கள்) மற்றும் அலிபிரியில் உள்ள ‘பூதேவி’ காம்ப்ளக்ஸில் (4 கவுன்ட்டா்கள்) என 18 கவுன்ட்டா்களில் காலை 5 மணி முதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. தரிசனத்துக்கு முன்தினம் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை அளித்து டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்.

65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், 10 வயதுக்கு உட்பட்டவா்களுக்கும் தரிசன அனுமதி இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com