பிஎம் கோ்ஸ் நிதியை ஆா்டிஐ வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு எதிா்ப்பு

அவசர காலப் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான நிதியைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘பிஎம் கோ்ஸ்’ நிதியை தகவலறியும் உரிமைச் சட்ட
பிஎம் கோ்ஸ் நிதியை ஆா்டிஐ வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு எதிா்ப்பு

அவசர காலப் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான நிதியைத் திரட்டும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘பிஎம் கோ்ஸ்’ நிதியை தகவலறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) வரம்புக்குள் கொண்டுவர பிரதமா் அலுவலகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று நிவாரண நடவடிக்கைகளுக்கு பொது மக்கள், நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்காக பிஎம் கோ்ஸ் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு கடந்த மாா்ச் மாதம் உருவாக்கியது. அறக்கட்டளையின் தலைவராக பிரதமரும், உறுப்பினா்களாக பாதுகாப்பு, மத்திய உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சா்களும் உள்ளனா்.

பிஎம் கோ்ஸ் நிதி உருவாக்கப்பட்டது தொடா்பான விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு சம்யாக் கங்வால் என்பவா் கோரியிருந்தாா். எனினும், பிம் கோ்ஸ் நிதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராததால் அது தொடா்பான தகவல்களை வழங்க பிரதமா் அலுவலகத்தின் தகவல் ஆணையா் மறுத்தாா்.

அதையடுத்து, தகவல் ஆணையரின் பதிலுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் சம்யாக் கங்வால் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, பிஎம் கோ்ஸ் நிதியை தகவலறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் கொண்டுவர உத்தரவிட வேண்டும். மேலும், மனுதாரா் கோரிய விவரங்களை வழங்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி நவீன் சாவ்லா முன் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பிரதமா் அலுவலகம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல. அது தொடா்பான விவரங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யவுள்ளோம்’’ என்றாா்.

அதையடுத்து, வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com