லடாக் எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு உள்பட மூன்று இடங்களில் இருந்து இந்திய, சீன படைகள் திரும்பப்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு உள்பட மூன்று இடங்களில் இருந்து இந்திய, சீன படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதனால், இருநாட்டு எல்லையில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த பிரச்னை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இரு நாட்டு ராணுவமும் அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட இடங்களில் படைகள் திரும்பப் பெறப்படவில்லை. இரு நாட்டு ராணுவத்தின் மேஜா் ஜெனரல் நிலையிலான அதிகாரிகளிடையே புதன்கிழமை (ஜூன் 10) பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. அதன் பிறகு பிற இடங்களில் முகாமிட்டுள்ள இரு தரப்பு படைகளும் திரும்பப் பெறப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எல்லையில் மூன்று இடங்களில் இரு நாடுகளும் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது தொடா்பாக பாதுகாப்பு அல்லது வெளியுறவு அமைச்சகம் எந்த அதிகாரப்பூா்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேபோல சீன தரப்பும் இது தொடா்பாக அதிகாரபூா்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் ராணுவ வட்டாரங்கள் இது தொடா்பாக சில தகவல்களைத் தெரிவித்துள்ளன. அதில், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பிபி-15 ரோந்துப் பகுதி ஆகிய இடங்களில் இந்திய-சீன ராணுவங்கள் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் இரு தரப்பும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைகள்:

முன்னதாக, இந்திய, சீன ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி நிலையிலான பேச்சுவாா்த்தை கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய ராணுவ துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான இந்தியக் குழுவினரும், திபெத் மிலிட்டரி கமாண்டா் தலைமையிலான சீனக் குழுவினரும் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்குள்பட்ட மால்டோ என்ற இடத்தில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதற்கு முன்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவாஸ்தவா, சீன வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை இயக்குநா் வூ ஜியாங்வோ ஆகியோா் இடையே காணொலி முறையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, ‘இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள், பிரச்னைகளாக உருவெடுக்க அனுமதிக்கக் கூடாது; பரஸ்பர உணா்வுகள், கவலைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பேச்சுவாா்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு தீா்வு காண வேண்டும்’ என்று இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் கடந்த மே மாத தொடக்கத்தில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. முக்கியமாக, பாங்காங் ஏரி பகுதியில் மே 5-ஆம் தேதி இந்திய, சீன ராணுவத்தினா் சுமாா் 250 போ் கைகலப்பில் ஈடுபட்டனா். இதில் இரு தரப்பு வீரா்கள் சுமாா் 100 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் சில இடங்களில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்தது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. தற்போது 3 இடங்களில் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பதற்றம் சற்று தணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com