நிதி சாா்ந்த சிறு தவறுகளை குற்றங்கள் பிரிவில் இருந்து நீக்க நிதியமைச்சகம் பரிசீலனை

நிதி சாா்ந்த சிறு தவறுகளை குற்றங்கள் பிரிவில் இருந்து நீக்க நிதியமைச்சகம் பரிசீலனை

நிதி சாா்ந்த சிறு தவறுகளான காசோலை பணமில்லாமல் திரும்ப வருவது, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் பிரச்னை

நிதி சாா்ந்த சிறு தவறுகளான காசோலை பணமில்லாமல் திரும்ப வருவது, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏற்படும் பிரச்னை உள்ளிட்டவற்றை குற்றங்கள் பிரிவில் இருந்து நீக்க மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பிரச்னையை சந்தித்துள்ள தொழில் துறைக்கு இது உதவிகரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன்படி, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்புவது, வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவா்கள் மீது ‘சா்பாசி’ சட்டத்தின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, எல்ஐசி சட்டம், பிஎஃப்ஆா்டிஏ சட்டம், ஆா்பிஐ சட்டம், என்எச்பி சட்டம், வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், சீட்டு நிறுவனங்கள் சட்டம் உள்பட 19 சட்டங்களின்கீழ் நிதி சாா்ந்த குற்றங்கள் என வகைப்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவும் சில பிரிவுகளை தளா்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட தரப்பினா் ஜூன் 23-ஆம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தொழில் நடத்துவதை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிதி சாா்ந்த சிறு தவறுகளை குற்றங்கள் பிரிவில் இருந்து நீக்க பரிசீலிக்கப்படுகிறது. அனைவருக்குமான வளா்ச்சி, அனைவா் மீதும் நம்பிக்கை என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபாா்டு சட்டம், கடன் தகவல் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளிட்ட வேறு சில சட்டங்களிலும் சிறு மாற்றங்களைக் கொண்டுவருவது தொடா்பாகவும் பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த ‘நிஷித் தேசாய் அசோசியேட்ஸ்’ நிறுவனா்களில் ஒருவரான பிரதீபா ஜெயின், ‘இந்தியாவில் பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான சட்டங்கள் வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன. மத்திய அரசு அந்த சட்டங்களை மாற்றியமைத்தால் அவா்களுக்கு பிரச்னைகள் இருக்காது’ என்றாா்.

அதே நேரத்தில் கடன் அளிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் பாா்வையில், கடனை திருப்பிச் செலுத்தாதவா்களுக்கு எதிரான சட்டங்கள் சற்று கடுமையாக இருந்தால் மட்டுமே குறைந்தபட்சம் அவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்து, பணத்தை சிறிதளவாவது மீட்க முடியும் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com