கிராமப் பஞ்சாயத்தினால் நிறைவேறிய 'பேஸ்புக் காதல்': வாட்ஸ் அப்பும் துணைக்கு வந்த கதை

கரோனா ஊரடங்கு காலத்தில் பேஸ்புக் வழியாக ஏற்பட்டு, வாட்ஸ் அப் வழியாக வளர்ந்த காதல் ஒன்று, இறுதியாக கிராமப் பஞ்சாயத்தின் வழியாக கைகூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கான்பூர்: கரோனா ஊரடங்கு காலத்தில் பேஸ்புக் வழியாக ஏற்பட்டு, வாட்ஸ் அப் வழியாக வளர்ந்த காதல் ஒன்று, இறுதியாக கிராமப் பஞ்சாயத்தின் வழியாக கைகூடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் சங்கர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா (23). இவருக்கும் கன்னோஜ் மாவட்டம் சவுத்ரஹார் கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் (25) என்பவருக்கும் இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் பேஸ்புக் வழியாக நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு அப்படியே வளர்ந்து காதலாக மாறியது. இருவரும் வாட்ஸ் அப் வழியாக தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.

ஆனால் பிரிஜேஷின் குடும்பத்தார் வழக்கம் போல் இவர்கள் காதலை ஏற்கவில்லை. இதையறிந்த பூஜா நேரடியாக பிரிஜேஷின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரை சம்மதிக்கச் செய்வது என்று முடிவெடுத்தார்.

அதையடுத்து தனது ஊரில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள சவுத்ரஹார் கிராமத்திற்கு, கிடைத்த ட்ரக் ஒன்றில் கடந்த வார இறுதியில் புறப்பட்டுச் சென்றார். முக்கால்வாசி தொலைவில் அந்த ட்ரக் பூஜாவை விட்டுவிட, அங்கிருந்து கடைசி 20 கிலோ மீட்டர்களை நடந்தே  சென்ற அவர் பிரிஜேஷின் கிராமத்தைச் சென்றடைந்தார்.

ஆனாலும் பிரிஜேஷின் பெற்றோர் அவரது கோரிக்கையை ஏற்க மறுக்கவே, பூஜா அவர்கள் வீட்டின் முன்னால் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவலானது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சிங்கின் கவனத்திற்குச் சென்றது. அவரது தலைமையில் உடனடியாக ஊர் பஞ்சாயத்து கூடியது.

அவர்கள் முன்னிலையில் பூஜா தனக்கும் பிரிஜேஷுக்கும் இடையே நடந்த பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்களை சாட்சியாக முன்வைத்தார். இதையடுத்து பிரிஜேஷ் பூஜாவை         திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர். இம்மாத இறுதியில் பிரிஜேஷ் வீட்டார் திருமண  ஏற்பாடு செய்ய உள்ளதாக ஜெய்சிங் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com