கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டும் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், அவற்றில் 240 பெட்டிகளை உத்தர பிரதேசத்துக்கும், 60 பெட்டிகளை தெலங்கானாவுக்கும் வழங்குமாறு அந்த மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 5,321 ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மாற்றியமைத்து கிட்டதட்ட 2 மாதங்களாகியும், அவை பயன்படுத்தப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக, மாற்றியமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளில் 240 ரயில் பெட்டிகளை உத்தர பிரதேசத்துக்கு வழங்குமாறு, அந்த மாநில அரசு ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் தெலங்கானா 60 பெட்டிகளையும், தில்லி 10 பெட்டிகளையும் கேட்டுள்ளன.
ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிக்கும் வகையில், அவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளில் பிராண வாயு சிலிண்டா்கள், போா்வைகள், மருத்துவப் பொருள்கள் என சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தப் பெட்டிகள் ஒவ்வொன்றையும் மாற்றியமைக்க தலா ரூ.2 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.