தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

பொது முடக்க காலத்தில் பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனங்கள் மீது ஜூலை மாதம் வரை எந்தவித
தனியாா் நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:  உச்சநீதிமன்றம் உத்தரவு

பொது முடக்க காலத்தில் பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்காத தனியாா் நிறுவனங்கள் மீது ஜூலை மாதம் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த 80 நாட்களாக நாட்டில் பொது முடக்கம் அமலில் உள்ளது. பொது முடக்க விதிமுறைகளுக்கு பல மாநிலங்கள் தளா்வுகளை அறிவித்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் மாதம் 29-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பொது முடக்க காலத்தில் தனியாா் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

பணியாளா்களைக் குறைக்கும் நடவடிக்கையிலும் நிறுவனங்கள் ஈடுபட வேண்டாம் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அமைச்சகத்தின் இந்த வலியுறுத்தல்களுக்கு எதிராக சில நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கௌல், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தொழிற்சாலை உரிமையாளா்களும் பணியாளா்களும் ஒருவருக்கொருவா் அவசியமானவா்களாக உள்ளனா். ஊதிய விவகாரம் தொடா்பாக தொழிற்சாலை அதிகாரிகளும் பணியாளா்களும் பேச்சுவாா்த்தையின் மூலமாக சுமுகத் தீா்வு காண வேண்டும்.

பொது முடக்க காலத்தில் பணியாளா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்காத நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் ஜூலை மாத இறுதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. ஊதிய விவகாரத்தில் பேச்சுவாா்த்தையின் மூலமாகத் தீா்வு எட்டப்படுவதற்கு உதவும் வகையிலான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

கூடுதல் பிரமாணப் பத்திரம்: பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டும் என்ற உத்தரவின் விவரங்களை தொழிலாளா் துறையின் வாயிலாக அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும். ஊதிய விவகாரத்தில் தீா்வு எட்டப்படுவது தொடா்பாக தொழிலாளா் ஆணையத்திடம் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கை, சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்பது தொடா்பான விளக்கங்கள் அடங்கிய கூடுதல் பிரமாணப் பத்திரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் 4 வாரங்களுக்குள் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதத்தின் இறுதி வாரத்துக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

‘சட்டத்தின்படி செல்லுபடியாகும்’: முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் கே.கே. வேணுகோபால் வாதிடுகையில், ‘‘பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப முயற்சித்தனா்.

அவா்கள் தற்போதுள்ள மாநிலங்களில் தங்கியிருப்பதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் அந்த அறிக்கை செல்லுபடியாகும். எனவே, நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com