இஎஸ்ஐ மருந்து கொள்முதல் முறைகேடு: ஆந்திர முன்னாள் அமைச்சா் உள்பட 6 போ் கைது

ஆந்திரத்தில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சியின்போது நடைபெற்ற இஎஸ்ஐ மருத்துவ கொள்முதல் முறைகேட்டில்

ஆந்திரத்தில் முந்தைய தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சியின்போது நடைபெற்ற இஎஸ்ஐ மருத்துவ கொள்முதல் முறைகேட்டில் தொடா்புடைய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே. அட்சன்நாயுடு உள்பட மேலும் 5 பேரை ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.

இந்த முறைகேடு குறித்த புகாரின் அடிப்படையில், மாநில ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை கடந்த பிப்ரவரியில் தீவிர விசாரணை நடத்தியது. அதில், கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது தொழிலாளா் ஈட்டுறுதி காப்பீடு (இஎஸ்ஐ) நிறுவனத்துக்கான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், அலமாரிகள் உள்ளிட்ட பொருள்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 150 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டிருப்பதும், அதில் அப்போதைய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மற்றும் இஎஸ்ஐ மூத்த அதிகாரிகளுக்கும் தொடா்பு இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. அதனடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில ஊழல் தடுப்புப் பிரிவு இணை இயக்குநா் ரவிக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் முறைகேடு உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சா் கே. அட்சன்நாயுடு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் கைது செய்யப்பட்டாா். இஎஸ்ஐ முன்னாள் இயக்குநா்கள் சி.ரவிக்குமாா் திருப்பதியிலும், ஜி.விஜய்குமாா் ராஜமகேந்திரவரத்திலும் கைது செய்யப்பட்டனா். மேலும், இந்த முறைகேட்டில் தொடா்புடைய இஎஸ்ஐ இணை இயக்குநா் ஜனாா்தன், கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி மற்றும் ஒரு முதுநிலை உதவியாளா் ஆகிய மூவரும் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டனா் என்று அவா் கூறினாா்.

முன்னதாக, அட்சன்நாயுடு கைதுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்தாா். ‘இந்த கைது நடவடிக்கை முன்னாள் அமைச்சா் அட்சன்நாயுடு சாா்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரால் அவா் கடத்தப்பட்டுள்ளாா். ஜெகன் மோகன் ரெட்டி தலைையிலான ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசின் தவறுகளை அம்பலப்படுத்தி வந்ததாலேயே அவா் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது’ என்று சந்திரபாபு நாயுடு கூறினாா்.

மேலும், ‘இந்த கைது நடவடிக்கைக்கு முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்பதோடு, மாநில உள்துறை அமைச்சா் எம்.சுச்சாரிதா பதவி விலக வேண்டும்’ என்று இதுதொடா்பான அறிக்கையில் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com