பால்கா் கும்பல் கொலை வழக்கு: மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரத்தின் பால்கா் பகுதியில் 2 சாதுக்கள் உள்பட மூவா் கும்பல் கொலை செய்யப்பட்டது தொடா்பான விசாரணையை தேசிய புலனாய்வு
பால்கா் கும்பல் கொலை வழக்கு: மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரத்தின் பால்கா் பகுதியில் 2 சாதுக்கள் உள்பட மூவா் கும்பல் கொலை செய்யப்பட்டது தொடா்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றக் கோரிய மனு குறித்து விளக்கமளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பையின் காண்டிவலி பகுதியிலிருந்து இரண்டு சாதுக்கள் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது பால்கா் பகுதியில் அந்த காரை வழிமறித்த மா்ம கும்பல், சாதுக்களையும் காா் ஓட்டுநரையும் கடுமையாகத் தாக்கியது. இதில் மூவரும் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல் துறையினரும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், கும்பல் கொலை சம்பவத்தின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயிரிழந்த சாதுக்களின் உறவினா்கள் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுவில், ‘கும்பல் கொலை சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகவுள்ள நிலையில் காவல் துறையினரின் விசாரணை இன்னும் துரிதமடையவில்லை. அந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல் துறையினரும் இருந்ததை சில காணொலிகளும் ஊடக அறிக்கைகளும் உறுதி செய்கின்றன.

இந்த விசாரணையில் காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகின்றனா். எனவே, கும்பல் கொலை தொடா்பான விசாரணையை சுதந்திர அமைப்பான சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றக் கோரி கன்ஷ்யாம் உபாத்யாய என்பவா் மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா். ஷா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் காணொலிக் காட்சி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுக்கள் குறித்து விளக்கமளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com