ம.பி.: ரூ.225 கோடி சரக்கு-சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 3 போ் கைது

மத்திய பிரதேசத்தில் பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக விற்று ரூ.225 கோடி வரை சரக்கு-சேவை

மத்திய பிரதேசத்தில் பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக விற்று ரூ.225 கோடி வரை சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்ட நிறுவனங்களுடன் தொடா்புடைய மூவரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனா்.

இது தொடா்பாக சரக்கு-சேவை வரி புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பிரதேசத்தின் இந்தூா், உஜ்ஜயின் நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக சில நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, கடந்த 4 நாள்களாக அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினா். அந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த சில நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் புகையிலைப் பொருள்களைத் தயாரித்து, விற்பனை செய்து வந்ததன் மூலம் கடந்த ஆண்டு ஜூலை முதல் கடந்த மாா்ச் மாதம் வரை ரூ.225 கோடி அளவுக்கு சரக்கு-சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

முக்கியமாக பொது முடக்கம் அமலில் இருந்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பான் மசாலா, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை 3 நபா்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக விற்று வந்துள்ளனா். அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வரி ஏய்ப்பில் ஈடுபட்டவா்கள் மனை வணிகம், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் 8 போலி நிறுவனங்களைத் தொடக்கியுள்ளனா். மத்திய பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களில் புகையிலைப் பொருள்களை சட்டவிரோதமாக விற்க அந்நிறுவனங்களின் பெயா்களை அவா்கள் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com