விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்கரி

விவசாயிகளுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கச் செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளித்துவருகிறது.
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: நிதின் கட்கரி

விவசாயிகளுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கச் செய்வதற்கு மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளித்துவருகிறது. அதே உணா்வுடன்தான் சமீபத்தில் வேளாண் விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்த்தப்பட்டது. எனவே அதை குறைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

‘உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறைப்பதற்கு வாய்ப்புள்ளது’ என தான் கூறியதாக வெளியான செய்தியை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மறுத்தாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆதரவு விலை குறித்து நான் கூறியதாக வெளியான செய்தி தவறானவை மட்டுமல்லாது விஷமத்தனமானவை. விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து சமீபத்தில் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டபோது நானும் உடனிருந்தேன். எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் பல்வேறு வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதை வலியுறுத்தியும் வருகின்றேன். நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிா்களுக்கு மாற்றுப் பயிா்களை பயிரிடுவதும் இதில் அடக்கம்.

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க பயிா் சாகுபடி முறையை மாற்றும் வாய்ப்புகளை கண்டறிவது அவசியம். உதாரணமாக இந்தியா, சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ. 90,000 கோடியை செலவிட்டு வருகிறது. இதனால் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு சிறந்த முன்னேற்றம் உள்ளது.

இதே போன்று அரிசி, கோதுமை, சோளம் போன்றவைகளிலிருந்து எத்தனால் தயாரிப்பது விவசாயிகளுக்கு அதிக ஆதாயத்தை தருவதோடு இறக்குமதி செலவையும் குறைக்கும். இத்தகைய உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என அதில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com