குடிகாரக் குரங்குக்கு வாழ்நாள் சிறை: உத்தரப்பிரதேசத்தில் விநோதம்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் இந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
குடிகாரக் குரங்குக்கு வாழ்நாள் சிறை: உத்தரப்பிரதேசத்தில் விநோதம்


கான்பூர்: குரங்குக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் இந்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.

வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குரங்கின் பெயர் கலுவா. மிர்ஸாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கலுவா, அப்பகுதியைச் சேர்ந்த 250 பேரைக் கடித்துள்ளது. இதில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார்.

மிர்ஸாபூர் மாவட்டத்தில், இந்த கலுவா குரங்கை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்துள்ளார். அவர் தினமும் இந்த குரங்குக்கு மதுபானம் கொடுத்து பழக்கியுள்ளார். திடீரென குரங்கை வளர்த்து வந்தவர் மரணம் அடைய, குரங்குக்கு மதுபானம் கிடைக்கவில்லை.

இதனால் மது வெறி கொண்டு, அப்பகுதியில் போவோர் வருவோரை எல்லாம் குரங்கு கடித்துக் குதறியது. மிர்ஸாபூர் மக்கள் இந்த குரங்கைப் பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமடைந்த நிலையில், வனத்துறையினர் விரைந்து வந்து கலுவாவைப் பிடித்தனர். கான்பூர் உயிரியல் பூங்காவில் குரங்கு அடைக்கப்பட்டது.

முதலில் அதனை தனியாக ஒரு அறையில் வைத்துப் பராமரித்தோம். பிறகு அதை தனிக்கூண்டில் அடைத்தோம். எனினும் அதன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அது மிகுந்த வெறியோடு அலைகிறது. அது வனத்துறையால் பிடிபட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை அது மாறாததால், இனி வாழ்நாள் முழுக்க அதனை தனிக் கூண்டிலேயே அடைத்து வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கலுவா குரங்குக்கு ஆறு வயது ஆகிறது, இப்போது இதை வெளியே விட்டால், அனைவரையும் துன்புறுத்திவிடும். இதை மூன்று ஆண்டுகளாகப் பராமரிப்பவரிடம் கூட அன்பாகப் பழகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

மதுவுக்கு அடிமையான குரங்குக்கே இந்த நிலைமை என்றால்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com