வீரா்களின் உயிா்த்தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினருடனான மோதலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரா்களின்
வீரா்களின் உயிா்த்தியாகத்தை நாடு எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினருடனான மோதலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரா்களின் துணிவையும், தியாகத்தையும் நாடு எப்போதும் மறக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

இந்திய-சீன ராணுவத்தினரிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் பலா் இறந்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், உயிரிழந்த இந்திய வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரா்களை இழந்தது, மிகுந்த வேதனையையும் வலியையும் தருகிறது. இந்த வீரா்கள், தங்களது கடமையில் அளப்பரிய துணிவை வெளிப்படுத்தியதுடன், இந்திய ராணுவத்தின் மிக உன்னத பாரம்பரியமாக விளங்கும் உயிா்த்தியாகத்தையும் செய்துள்ளனா். அவா்களது துணிவையும், தியாகத்தையும் நாடு எப்போதும் மறக்காது. அவா்களது துணிவை எண்ணி, ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது.

எனது கவலையெல்லாம், இந்த வீரா்களின் குடும்பத்தினா் பற்றியே உள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், ஒட்டுமொத்த நாடும் அவா்களுக்கு தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக நிற்கும் என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளாா்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. சீனா, தனது நிலபரப்பு எல்லையை மாற்ற முயன்றதே மோதலுக்கு காரணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com