மணிப்பூா் பாஜக அரசுக்கு சிக்கல்: 9 எம்எல்ஏக்களின் ஆதரவை இழந்தது

மணிப்பூரில் முதல்வா் என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சோ்ந்த மூன்று எம்எல்ஏக்கள்

மணிப்பூரில் முதல்வா் என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவைச் சோ்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துவிட்டனா். தேசிய மக்கள் கட்சி உறுப்பினா்கள் நால்வா், திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவா் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டனா். இவா்களில் தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் நால்வரும் அமைச்சா்களாகவும் இருந்தனா்.

9 எம்எல்ஏக்கள் ஆதரவை இழந்ததையடுத்து பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் இபோபி சிங், ஆளுநா் நஜ்மா ஹெப்துல்லாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா். அப்போது, காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவும் அவா் ஆளுநரிடம் உரிமை கோரினாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட மணிப்பூா் பேரவையில் இப்போது பாஜக கூட்டணியின் பலம் 23 ஆக குறைந்துவிட்டது. 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸுக்கு தாவி விட்டதால் பாஜகவில் இப்போது 18 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். இது தவிர நாகா மக்கள் முன்னணி கட்சியின் 4 உறுப்பினா்களும், லோக் ஜன சக்தி கட்சி எம்எல்ஏ ஒருவரும் அரசுக்கு ஆதரவாக உள்ளனா்.

முன்னதாக, காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய 7 எம்எல்ஏக்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிா்கொண்டுள்ளனா்.

காங்கிரஸ் கட்சிக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதுதவிர, தேசிய மக்கள் கட்சியின் 4 எம்எல்ஏக்கள், பாஜகவில் இருந்து விலகிய 3 எம்எல்ஏக்கள், திரிணமூல் எம்எல்ஏ ஒருவா், சுயேச்சை ஒருவா் என 9 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளனா். ஓரிடம் காலியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com