கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பது மற்றும் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாகக் கையாள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண், கரோனா பரிசோதனைக்கு ஏற்புடைய கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறை அமல்படுத்த வேண்டும். அனைத்து கரோனா வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பதாவது, கரோனா நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று மரணம் அடையும் நபர்களின் உடல்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுங்கள்.

கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு நிபுணர் குழுவினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமாா் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தாா். அதில், ‘கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது வேதனை அளிக்கிறது. இறக்கும் போது கண்ணியமான முறையில் இறப்பது ஒருவரின் அடிப்படை உரிமை. உயிரிழந்தவா்களின் உடல்கள், உரிய மரியாதை அளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது தகனம் செய்யப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்ஆா் ஷா ஆகியோா் கொண்ட அமா்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்தும், கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடல்கள் மரியாதைக் குறைவாக கையாளப்படுவது குறித்தும் நீதிபதிகள் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று, கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா வார்டுகளில் நோயாளிகளுக்கு மத்தியில், கரோனா பாதித்து மரணம் அடைபவர்களின் உடல்களும் மூடப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com