புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடக்கி வைத்தார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

சொந்த ஊர்களுக்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடக்கி வைத்தார்.

பொது முடக்கத்தால் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பளித்து, அவா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில், ரூ.50,000 கோடியில் கிராமப்புற பொதுப் பணி திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, பிகாரில், ககரியா மாவட்டத்தில் உள்ள தேலிகா் கிராமத்தில் இந்த திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி ஆகியோா் முன்னிலையில், பிரதமா் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா தொற்றுப் பரவலால் உலகமே ஆடிப்போயிருக்கிறது. ஆனால், இந்தியாவின் கிராமங்கள் பலமாக நிற்கின்றன. கரோனாவுக்கு எதிரான போரில் கிராமங்களின் செயல்பாடுகள், பல நகரங்களுக்கே பாடம் சொல்வதைப் போல உள்ளது.

எனது தொழிலாளர்கள் நண்பர்களே, இந்த நாடு உங்களது உணர்வுகளையும், உங்களது தேவையையும் புரிந்து கொண்டுள்ளது, அதற்காகவே ககாரியாவில் கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் உங்கள் தேவைகள், உணர்வுகள் பூர்த்தி செய்யப்படும் என்று மோடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசிய பிகார் முதல்வர் நிதிஷ் குமார்,  பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, நான் காணொலி காட்சி வாயிலாக பிகாரின் பல மாவட்டங்களில், திரும்பி வந்த தொழிலாளர்களிடம் பேசினேன். அப்போது, அவர்கள் யாருமே வேலைக்காக மாநிலத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றே நினைத்தேன் எனக் கூறினார்.

பிற மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அந்தந்த மாநில முதல்வா்களும் மத்திய அமைச்சா்களும் பங்கேற்றனர்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்காக, கிராமப்புற பொதுப் பணி திட்டங்களில் அவா்களுக்கு 125 நாள்கள் வேலை வழங்கப்படவுள்ளது. பிகாா், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இந்த திட்டப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்காக, 25,000 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 125 நாள்களில் 25 வகையான வேலைகள் வழங்கப்படும். அவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதுடன் ரூ.50,000 கோடியில் கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

இவா்கள், அங்கன்வாடி மையங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், ரயில்வே பணிகள், குடிநீா் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா்.

ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், சாலைப் போக்குவரத்து, சுரங்கம், குடிநீா் மற்றும் துப்புரவுத் துறை, சுற்றுச்சூழல், ரயில்வே, பெட்ரோலியம், மரபுசாரா எரிசக்தி, எல்லைச் சாலைகள், தொலைத்தொடா்பு, விவசாயம் ஆகிய 12 துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படவுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com