உண்மையை மறைப்பது ராஜதந்திரம் ஆகாது: லடாக் விவகாரத்தில் மன்மோகன் சிங் 

உண்மையை மறைப்பது ராஜதந்திரம் ஆகாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்துக் கூறியுள்ளார்.
லடாக் விவகாரத்தில் மன்மோகன் சிங் கருத்து
லடாக் விவகாரத்தில் மன்மோகன் சிங் கருத்து

புது தில்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்தில், உண்மையை மறைப்பது ராஜதந்திரம் ஆகாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்துக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர்  பேசியது குறித்து மன்மோகன் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், நமது எல்லைப் பகுதியைப் பாதுகாக்க, கலோனல் பி. சந்தோஷ் பாபு உள்பட நமது வீரர்கள் செய்த உயிர்த் தியாகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் நிச்சயம் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல், அதற்கு எந்த வகையில் குறைபாடு ஏற்பட்டாலும், அது மக்களின் நம்பிக்கைக்கு செய்த வரலாற்றுத் துரோகமாகிவிடும். உண்மையான தகவல்களை மறைப்பது, ராஜதந்திரமாகவோ, நல்ல தலைமையாகவோ இருக்காது என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று, கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்துத் தெரிவித்திருக்கும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், நாம் வரலாற்றின் இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிற்கிறோம், நமது அரசின் முடிவுகளும், நடவடிக்கைகளுமே, எதிர்கால சந்ததியினர், நம்மை எப்படி புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பதற்கு அடிப்படையாக அமையும். நம்மை வழிநடத்துபவர்கள், மிகப் புனிதமான ஒரு சுமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நமது ஜனநாயக அமைப்பு, அந்தக் கடமையை பிரதமர் அலுவலகத்துக்கு அளித்துள்ளது. எனவே, பிரதமர் பதவியில் இருப்பவர்கள், மிகவும் கவனத்துடன் வார்த்தைகளைக் கையாள வேண்டும், குறிப்பாக நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் கொள்கைகள், எல்லை விவகாரங்கள் குறித்து பேசும்போது என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் விவரித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - சீனா எல்லைப் பகுதியில், இந்தியாவின் நிலப் பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமிக்கவோ, ஊடுருவவோ இல்லை என்று பேசியிருந்தது கடும் விமரிசனத்துக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com