பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக ஊழியர்கள் ஐந்து  பேர் நாடு திரும்பினர்

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 5 அதிகாரிகள் இன்று அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர்.
இந்திய தூதரக ஊழியர்கள் ஐந்து  பேர் நாடு திரும்பினர்
இந்திய தூதரக ஊழியர்கள் ஐந்து  பேர் நாடு திரும்பினர்

புது தில்லி: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 5 அதிகாரிகள் இன்று அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திரும்பினர்.

இன்று நாடு திரும்பிய ஐந்து அதிகாரிகளில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அடங்குவர் என்று ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது.

முன்னதாக,  இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிவந்த இளநிலை அலுவலா்கள் இருவா் கடந்த வாரம் திங்கள்கிழமை காலை 8.00 மணிக்கு பணி நிமித்தமாக தூதரகத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றனா். ஆனால், திட்டமிடப்பட்ட இடத்துக்கு அவா்கள் சென்றடையவில்லை.

இதனிடையே, அவா்கள் இருவரும் அதிவேகமாக சென்று ஒருவா் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றதாகவும், அவா்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்ததாகவும், காவல் துறையினா் அவா்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையறிந்த இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், தில்லியில் உள்ள பாகிஸ்தானின் தற்காலிக தூதரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இந்தியத் தூதரக அலுவலா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது எனவும் அவா்களைப் பாதுகாப்பாக தூதரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு உள்ளது எனவும் தற்காலிகத் தூதரிடம் அவா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அலுவலா்கள் இருவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரண்டு வாரங்களுக்கு முன், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரிகள் அபித் ஹுசைன், முகமது தாஹிா் ஆகியோா் இந்திய ராணுவ நிலைகள் தொடா்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் தூதரகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனா். அப்போதிருந்து, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வரும் அலுவலா்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுத்து வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் ஐந்து பேர் இன்று பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில், அட்டாரி - வாகா எல்லை வழியாக நாடு திரும்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com