புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: உச்ச நீதிமன்றம்

ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை கடும் நிபந்தனைகளுடன் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதி.
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதி.


ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை சில நிபந்தனைகளுடன் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதே சமயம், புரியில் கரோனா தொற்று அதிகமாகப் பரவினால், ரத யாத்திரையை ரத்து செய்ய மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை வரும் 23-ஆம் தேதி முதல் 12 நாள்கள் நடத்தப்பட உள்ளது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, இந்தாண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம், இந்த ஆண்டு ரத யாத்திரைக்கு தடை விதித்தது.

இந்நிலையில், புரி சங்கராச்சாரியாா் நிஸ்சலானந்த சரஸ்வதி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அதிக எண்ணிக்கையிலான பக்தா்கள் கூடுவா் என்பதால், புரி ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது சரியான முடிவுதான். ஆனால், குறைந்த அளவிலான சேவாா்த்திகளைக் கொண்டு, யாத்திரையை நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்காக, ஏற்கெனவே பிறப்பித்த தடை உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றி, 500-600 கோயில் சேவாா்த்திகள் கலந்துகொண்டு ரத யாத்திரையை நடத்தும் வகையில் உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி, ஜெகந்நாதா் கோயில் பக்தா்கள் அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள், கரோனாவைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரையை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஒப்புக் கொண்டால், கடந்த 18-ம் தேதி ரத யாத்திரையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது.

மேலும், மிகவும் கட்டுப்பாட்டுடன், பக்தர்கள் இல்லாமல் ரத யாத்திரையை நடத்தவும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இதற்கும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படவும் ஒடிசா அரசு ஒப்புக் கொண்டது.

இதையடுத்து, ஒடிசா மாநிலம் புரி ஜெகந்நாதர் யாத்திரையை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

அதே சமயம், ஜூன் 18-ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், ரத யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்றால் கரோனா தொற்றுப் பரவும் அபாயம் அதிகம், மேலும், ரத யாத்திரை முடிந்த பிறகு அனைவரையும் அடையாளம் காண்பதும் முடியாத காரியம் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com