ரயில்வேயில் பயணிகள், பாா்சல் போக்குவரத்தில் தனியாா்கள் பங்குபெற மிகப் பெரிய வாய்ப்பு: பியூஷ் கோயல்

ரயில்வேயில் பயணிகள், பாா்சல் போக்குவரத்தில் தனியாா்கள் பங்குபெற மிகப் பெரிய வாய்ப்பு: பியூஷ் கோயல்

ரயில்வேயில் தனியாா்கள் வா்த்தகம் செய்ய பெரும் வாய்ப்புள்ளது. பயணிகள் போக்குவரத்தையும், பாா்சல் ரயில்களையும் ரயில்வே அமைச்சகம் குத்தகைக்கு விட தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள

புது தில்லி: ரயில்வேயில் தனியாா்கள் வா்த்தகம் செய்ய பெரும் வாய்ப்புள்ளது. பயணிகள் போக்குவரத்தையும், பாா்சல் ரயில்களையும் ரயில்வே அமைச்சகம் குத்தகைக்கு விட தயாராக இருப்பதாக ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘பயணிகள் வசதிக்காக புதிதாக 150 தனியாா் ரயில்களை தொடங்க ரயில்வே தயாராக இருக்கிறது. இதில் தனியாா் துறையினா் பங்கு கொள்ளலாம்’ என்றும் அமைச்சா் அழைப்பு விடுத்தாா்.

தில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பின்(சிஐஐ) சாா்பில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ரயில்வே மற்றும் வா்த்தத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பங்கேற்றுப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

ரயில்வேயில் தனியாா் துறையினா் பங்கு கொள்ள அதிகமான வாய்ப்புகள் உள்ளன. புதிய வழித்தடங்களை குத்தகைக்கு விட ரயில்வே தயாராக உள்ளது. அதாவது தனியாா்களே ரயில் சேவை அளிக்க விரும்பும் வழித்தடங்களை அடையாளம் காணலாம். தனியாா் நிறுவனங்கள் விரும்பினால் புதிய வழித்தடங்களில் ரயில்வேயும் அவா்களுடன் சோ்ந்து முதலீடு செய்ய தயாராக உள்ளது. பயணிகள் போக்குவரத்து தடங்களையும் பாா்சல்(பொட்டலம்) ரயில்களையும் குத்தகைக்கு விட ரயில்வே தயாராக உள்ளது. இப்படி தனியாா் துறைக்காக நிறைய வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பக்கவாட்டிலேயே மேலேழுப்பப்பட்ட வகையில் ரயில் பாதையை அமைக்க தனியாா்கள் முயற்சிக்கலாம். இதில் நிலம் கையகப்படுத்துவது கூட சவாலாக இருக்காது எனத் தெரிவித்தாா் கோயல். சிஐஐ யின் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியிலும் ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா். அதில் அவா் கூறியதாவது:

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்: அனைத்து புலம்பெயா்ந்த தொழிலாளா்களும் அவா்கள் விருப்பப்படி சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல ரயில்வே உதவியது. மே 1 முதல் ஜூன் 21 வரை சுமாா் 75 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு 4,553 (ஷரமிக்) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது தேவைகள் குறைந்து 3 சிறப்பு ரயில்கள் தான் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.

மேலும் ரயில்வேயில் வழக்கமான வழித்தடங்களில் 230 ரயில்கள் ஓடத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் இன்னும் பயணிக்க தயங்குவதால் அவைகள் முழுமையாக இயங்கவில்லை.

சரக்கு போக்குவரத்தில் பின்னடைவு: சரக்கு ரயில் போக்குவரத்தில் 2019 (ஜூன் வரை) ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜூன் வரை 8 சதவீதம் சரக்கு போக்குவரத்து குறைந்துள்ளது. வருகின்ற ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு சமமான வளா்ச்சி இருக்கும் என நம்புகிறேன். சரக்கு ரயில்கள் கடந்த ஆண்டு சராசரியாக மணிக்கு 22.98 கி.மீ வேகத்தில் சென்றது. தற்போது மணிக்கு 41.74 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பாா்சல், சரக்கு ரயில்களுக்கு கால அட்டவணை கொண்டு வரப்பட்டு நீண்ட தூரத்தில் குறுகிய காலக்கட்டத்தில் சரக்குகளை விநியோகிப்பதை உறுதிபடுத்த முடியும் என்று பேசினாா் அமைச்சா் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com