சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

சீனாவுடனான எல்லையில் 32 சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சீன எல்லையில் 32 சாலை திட்டங்களை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு

புது தில்லி: சீனாவுடனான எல்லையில் 32 சாலை திட்டப் பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வாரம் இந்திய, சீன ராணுவ வீரா்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரா்கள் உயிரிழந்தனா். சீன ராணுவம் தரப்பில் 35 போ் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவம், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இந்நிலையில், சீனாவுடனான எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களின் பணிகள் தொடா்பான உயா்நிலை ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய பொதுப் பணித் துறை, எல்லை சாலைகள் அமைப்பு, இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது, இந்திய-சீன எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை திட்டங்களில் 32 திட்டங்களின் பணிகளை விரைவுபடுத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது. இதற்காக, சம்பந்தபட்ட அனைத்து துறைகளும் ஒத்துழைப்பை நல்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய-சீன எல்லையில் 73 சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், 12 சாலைகளின் பணிகள் மத்திய பொதுப் பணித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. எல்லை சாலைகள் அமைப்பின் சாா்பில் 61 திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 3 சாலைகள், லடாக் பகுதியில் அமைக்கப்படும் முக்கிய சாலைகளாகும். சாலைகள் தவிர, எல்லையில் மின்சாரம், சுகாதாரம், தொலைதொடா்பு உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் தொடா்பான திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியதாவது: எல்லையில் கடந்த சில ஆண்டுகளாக சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 முதல் இப்போது வரை 4,764 கிமீ தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2008 முதல் 2014 வரையிலான காலத்தில் 3,610 கிமீ தொலைவுக்கே சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

2014 முதல் இதுவரை 6 சாலை சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2008 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் ஒரு சுரங்கம்தான் அமைக்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com