தில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: கண்காணிப்பு தீவிரம்

தில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
தில்லியில் பிரதமர், மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள ரெய்சினா ஹில்ஸ் சாலையில் திங்கள்கிழமை வாகனங்களை நிறுத்தி சோதனையிடம் போலீஸார்.
தில்லியில் பிரதமர், மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள ரெய்சினா ஹில்ஸ் சாலையில் திங்கள்கிழமை வாகனங்களை நிறுத்தி சோதனையிடம் போலீஸார்.

புது தில்லி: தில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தில்லியில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தில்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 4 அல்லது 5 பயங்கரவாதிகள் தில்லிக்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாகவும் அதனால், தில்லியின் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறையினர் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள 15 மாவட்ட போலீஸாரும் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். மேலும், வாகனத் தணிக்கை, கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பயங்கரவாதிகள் தில்லிக்குள் ஊடுருவ முடியாத வகையில், தில்லியின் எல்லைகள் சிறப்பு அதிரடிப்படைகள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தில்லி காவல்துறை உயர் அதிகாரி கூறுகையில், "பேருந்து, டாக்ஸி, கார் மூலமாக  தில்லிக்குள் பயங்கரவாதிகள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதால் எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறிச் சந்தைகள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில், நோயாளிகள் வேடத்தில் பயங்கரவாதிகள் மருத்துவமனைக்கு சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். 

தில்லியில் உள்ள ஹோட்டல்கள், விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றிலும் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தில்லியின் வடக்கு மாவட்டங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை வந்ததைத் தொடர்ந்து அங்கு போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கரோனா பரவலால் தில்லியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. மேலும், லடாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்த பதட்டமான சூழலைப் பயன்படுத்தி தில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com