கரோனா பாதிப்பு: யாரும் விரும்பாத பந்தயத்தில் மும்பையை முந்தியது தில்லி

கரோனா பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டு வரும் மும்பையை விட, புதன்கிழமை ஒரே நாளில் தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.
யாரும் விரும்பாத பந்தயத்தில் மும்பையை முந்தியது தில்லி
யாரும் விரும்பாத பந்தயத்தில் மும்பையை முந்தியது தில்லி


புது தில்லி: கரோனா பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டு வரும் மும்பையை விட, புதன்கிழமை ஒரே நாளில் தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

புதன்கிழமை ஒரே நாளில் தில்லியில் 3,788 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகரில் கரோனா பாதிப்பு 70,390 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் நேற்று 862 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,365 ஆக உயர்ந்துள்ளது. இது மும்பையை விட மிகக் குறைவுதான். மும்பையில் மார்ச் முதல் இதுவரை 3,964 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தில்லியில் மார்ச் 2-ம் தேதியும், மும்பையில் மார்ச் 11-ம் தேதியும் முதல் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால் மார்ச் 31-ம் தேதி மும்பையில் 151 ஆகவும், தில்லியில் 97 ஆகவும் கரோனா பாதிப்பு இருந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மும்பையில் கரோனா பாதிப்பு வேகம் பிடித்து கிட்டத்தட்ட 40 ஆயிரமானது. அதே சமயம் தில்லியில் மே இறுதியில் கரோனா பாதிப்பு 19,844 ஆக  இருந்தது. இது மும்பையைக் காட்டிலும் இரண்டில் ஒரு மடங்குதான்.

ஆனால் ஜூன் மாதத்தில் மும்பையில் கரோனா பாதிப்பு ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டாலும், தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்கவில்லை. இந்த நிலையில்தான் ஜூன் 23ல் ஒரே நாளில் தில்லியில் 3,947 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது 24 மணி நேரத்தில் கண்டறியப்படும் மிக அதிகமான கரோனா பாதிப்பாகும்.

தில்லியில் கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டதே, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என்று கூறப்பட்டது. சில வாரங்கள் வரை நாள்தோறும் 5 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இது 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com