ஆன்லைன் வகுப்பு: ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப்பள்ளி மாணவர்கள்; ஆசிரியர்களின் புதுமுயற்சி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பிக்க ஒரு புது யோசனையை ஆசிரியர்கள் செயல்படுத்தி காட்டியுள்ளனர். 
ஒலிபெருக்கிகள் மூலம் பாடங்களை கற்கும் மாணவர்கள்
ஒலிபெருக்கிகள் மூலம் பாடங்களை கற்கும் மாணவர்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களைக் கற்பிக்க ஒரு புது யோசனையை ஆசிரியர்கள் செயல்படுத்தி காட்டியுள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் தும்கா தொகுதியில் பங்கதி கிராமத்தில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் மொத்தம் 246 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால், இதில் 42 மாணவர்களிடம் மட்டுமே  ஸ்மார்ட்போன் உள்ளது. 

இதனால் பெரும்பாலான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கற்க முடியாத சூழ்நிலை இருந்ததால், ஆசிரியர்கள் ஒரு புது யோசனையை செயல்படுத்தி காட்டியுள்ளனர். அதன்படி, கிராமத்தைச் சுற்றியுள்ள மரக் கிளைகள் அல்லது கூரைகளில் பல ஒலிபெருக்கிகளை வைத்து மாணவர்களை வீட்டிற்கு வெளியே வரவழைத்து பாடங்களை கேட்கும்படி ஆசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். 

ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு, ஒரு ஒலிபெருக்கி வைக்கப்பட்டு மாணவர்கள் ஒரே இடத்தில் கூடும்பட்சத்தில் அவர்களை சமூக  இடைவெளியுடன் பொது இடத்தில் அமர வைத்து பாடங்களை கேட்க வைக்கின்றனர். மாணவர்களும் ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு பாடங்களை குறிப்பு எடுத்துக் கொள்கின்றனர். நாள் ஒன்றுக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகிறது. 

'நாங்கள் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்த போது பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இல்லாததால் அவர்கள் பாடங்களை கவனிக்க முடியவில்லை. எனவே, மாணவர்களின் வீடுகளுக்கு அருகிலுள்ள மரங்கள் மற்றும் கூரைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்த முடிவு செய்தோம். இப்போது, ​​குழந்தைகள் எங்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது'  என்று பள்ளி முதல்வர் ஷியாம் கிஷோர் காந்தி கூறினார்.

பொதுமுடக்க காலத்தில் விடுமுறையில் இருக்கும் அனைத்து குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும் அந்த முயற்சிகளில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவர் கூறினார். 

மேலும், 'மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாடம் கற்கின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் இருந்தால், அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது' என்றார். 

'என்னிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் வகுப்புகளை கவனிக்க முடியவில்லை. ஆசிரியர்களின் முயற்சியால் இன்று நாங்கள் படிக்கிறோம்' என எட்டாம் வகுப்பு மாணவர் கங்கா குமாரி கூறினார்.

உள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் பூனம் குமாரி, பள்ளி நிர்வாகத்தின் முயற்சியைப் பாராட்டியதோடு, மற்ற பள்ளிகளும் இந்த யோசனையை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார், இதனால், ஏழை, எளிய மாணவர்களும் இந்த நேரத்தில் கல்வி பயில முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com