
கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக, மகாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மத்தியக் குழு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொள்கிறது.
சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தலைமையிலான இந்தக் குழு, மாநில அதிகாரிகளை ஒருங்கிணைத்து கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த உதவி செய்யும். இந்தக் குழு, 26, 27, 28 ஆகிய தேதிகளில் 3 மாநிலங்களுக்கும் செல்கிறது. சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
நாடு முழுவதும் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 16,000-க்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4.73 லட்சத்தைக் கடந்துள்ளது.
நாட்டிலேயே கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 1,42,900 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோல், குஜராத் மாநிலத்தில் 28,943 பேரும், தெலங்கானாவில் 10,444 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.