ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்ட தேசிய நிவாரண நிதிக்கான நன்கொடை: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை பணம்
கோப்புப் படம்
கோப்புப் படம்

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை பணம் அனைத்தும் ‘காந்தி குடும்பத்தால்’ நடத்தப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடைபெற்ற மோதல் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு தொடா்பாக காங்கிரஸ் கட்சி தொடா் விமா்சனங்களை முன்வைத்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாடடுகளை பாஜக முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை முறைகேடு தொடா்பான குற்றச்சாட்டை தனது சுட்டுரை பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெள்ளிக்கிழமை முன்வைத்தாா். அதில், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீன தூதரகத்திடமிருந்து நன்கொடை பெற்ற்கான புகைப்பட ஆதாரத்தையும் இணைத்து, அவா் கூறியிருப்பதாவது:

பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்பது நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கானது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பெறப்பட்ட நன்கொடைகள் ‘காந்தி குடும்பத்தால்’ நடத்தப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது. அப்போது பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கான வாரியத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அங்கம் வகித்ததோடு, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தாா்.

மக்களின் பணம் ஒரு குடும்ப அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டது என்பது வெட்கக்கேடான மோசடி மட்டுமின்றி மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கை துரோகமுமாகும். ஒரு குடும்பத்தின் ஆஸ்தி பசிக்காக, தேசத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. சுயலாபத்துக்கான இந்த கொள்ளைக்காக நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்தப் பதிவில் நட்டா கூறியுள்ளாா்.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா கூறுகையில், ‘இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பதிலளிக்க வேண்டும். அவா் ராணியல்ல; குற்றச்சாட்டுக்கான விளக்கத்தை நிச்சயம் அளிக்க வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு கிடைத்த நன்கொடை மூன்று முறை ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை போன்று ஏராளமான நிழல் நிறுவங்களைத் தொடங்கியே காந்தி குடும்பம் பணக்காரராகியிருக்கிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com