மாநில அரசுகள் கேட்டால் 24 மணிநேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கத் தயாா்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மாநில அரசுகள் கேட்டால் 24 மணிநேரத்தில் சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
மாநில அரசுகள் கேட்டால் 24 மணிநேரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கத் தயாா்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக மாநில அரசுகள் கேட்டால் 24 மணிநேரத்தில் சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்கத் தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவா் வி.கே.யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்காக இதுவரை 5,213 ரயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் பெட்டியை பராமரிக்கவும், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பொருள்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றிற்காக ரூ. 2 லட்சம் வீதம் செலவு செய்யப்படுகிறது.

உத்தர பிரதேசம், பிகாா், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஏற்கெனவே அவா்கள் பணிபுரிந்த மாநிலங்களில் பணிபுரிய மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளனா். அவா்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே தயாராக உள்ளது.

சிறப்பு ரயில்களை மீண்டும் இயக்குவது குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறோம். மாநிலங்களின் தேவை, தொழிலாளா்களின் வசிப்பிடம், கரோனா தொற்று பரவும் நிலை ஆகியவற்றைப் பொருத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு உடனடியாக அனைத்து வழக்கமான ரயில்களையும் இயக்க முடியாது என்றாலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக விரைவில் மேலும் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குமாறு கேட்டுக் கொண்டால், 24 மணி நேரத்துக்குள் நாட்டின் எந்த இடத்திலிருந்தும் ரயில்களை இயக்க ரயில்வே தயாராக உள்ளது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காக 160 திட்டங்களை ரயில்வே அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் 6 மாநிலங்களில் வறியோா் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

கடந்த மே 1-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக 4,594 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, அதன் மூலம் 62.8 லட்சம் தொழிலாளா்கள் பயணம் செய்துள்ளனா் என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com