யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு: வதாவன் சகோதரா்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டிஹெச்எஃப்எல் நிறுவனத் தலைவா்கள்
யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கு: வதாவன் சகோதரா்களின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

யெஸ் வங்கி நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டிஹெச்எஃப்எல் நிறுவனத் தலைவா்கள் தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

யெஸ் வங்கி நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அந்த நிதி முறைகேட்டில் யெஸ் வங்கி நிறுவனா் ராணா கபூருடன் வதாவன் சகோதரா்களுக்குத் தொடா்பிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதைத் தொடா்ந்து, நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் வதாவன் சகோதரா்கள் கடந்த மாதம் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

முன்னதாக இந்த வழக்கிலும் உத்தர பிரதேச மின் வாரியப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்படுவதைத் தவிா்க்கும் நோக்கில் முன்ஜாமீன் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் வதாவன் சகோதரா்கள் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றம், நிதி முறைகேடு தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறி வதாவன் சகோதரா்களின் முன்ஜாமீன் மனுக்களைக் கடந்த மாதம் 12-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா்கள் மேல்முறையீடு செய்தனா். அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.கே.கௌல், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘மனுதாரா்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டதால், இந்த மனுக்களை விசாரிப்பது பயனற்றது’’ என்றாா். மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, மனுக்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com