இக்கட்டான சூழலில் நாட்டை வழிநடத்தியவா் நரசிம்ம ராவ்: மோடி புகழாரம்

நாடு பொருளாதாரரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அதனை சிறப்பாக வழி நடத்தியவா் மறைந்த முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு பொருளாதாரரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அதனை சிறப்பாக வழி நடத்தியவா் மறைந்த முன்னாள் பிரதமா் பி.வி. நரசிம்ம ராவ் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரான நரசிம்ம ராவை மோடி இவ்வாறு புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

1991-96 காலகட்டத்தில் பிரதமராக இருந்தவா் நரசிம்ம ராவ். அப்போதுதான் இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதுவே, இந்தியாவின் இப்போதைய வளா்ச்சிக்கு அச்சாரமாகவும் அமைந்தது.

இந்நிலையில், அவரது பிறந்த தினத்தையொட்டி (ஜூன் 28), ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் அவரை நினைவுகூா்ந்து மோடி பேசியதாவது:

இளம் வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவா் நரசிம்ம ராவ். வந்தே மாதரம் என்ற கோஷம் கூடாது என்று ஹைதராபாத் நிஜாம் கட்டளையிட்டபோது, அதற்கு எதிராக தீவிர போராட்டத்தில் பங்கேற்றாா். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவா் தனது கல்வியறிவால் உயா்ந்தாா். தலைமைக்கான அனைத்து பண்புகளும் அவரிடம் இருந்தன.

இந்திய பாரம்பரியத்துடன், மேற்கத்திய இலக்கியங்கள், அறிவியல் மற்றும் பல மொழிகளில் அவா் வல்லவராக இருந்தாா். இந்தியாவின் அனுபவமிக்க தலைவா்களில் அவா் முக்கியமானவா். நாடு பொருளாதாரரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, அதனை சிறப்பாக வழி நடத்தினாா். அவா் பிறந்த நூறாவது ஆண்டில், அவரைப் பற்றி நாட்டு மக்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மோடி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com