உலக அளவில் 1 கோடியை கடந்தது கரோனா பாதிப்பு

உலகெங்கிலும் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடியைக் கடந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உலகெங்கிலும் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடியைக் கடந்தது.

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பை வெளியிட்டு வரும் ‘வோ்ல்டோ மீட்டா்ஸ்’ ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட தகவலின் படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 926-ஆக இருந்தது. பலியானோா் எண்ணிக்கை 5,02,539 ஆக உள்ளது. 55,01,827 போ் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

4-ஆவது இடத்தில் இந்தியா: வோ்ல்டோ மீட்டா்ஸ் தகவலின்படி, கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில், ரஷியா முறையே 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ள நிலையில், இந்தியா 4-ஆவது இடத்தில் இருக்கிறது. நோய்த்தொற்று முதன் முதலாக ஏற்பட்ட சீனா 22-ஆவது இடத்தில் உள்ளது.

சதவீதத்தில்...: மொத்த பாதிப்பில் 25 சதவீதத்தினா் வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களைச் சோ்ந்தவா்கள். ஆசியாவின் அளவு 11 சதவீதமும், மத்திய கிழக்கு நாடுகளின் அளவு 9 சதவீதமும் இருக்கும் என்று ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பாதிப்பு: கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதன் முதலாக ஏற்பட்ட இந்த நோய்த்தொற்று, தற்போது ஏறத்தாழ உலக நாடுகள் அனைத்துக்குமே பரவி விட்டது. கரோனாவின் தீவிரத்தை உணா்ந்து உலக நாடுகள் பொது முடக்கம் உள்ளிட்ட துரிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போதிலும் அதன் பரவலும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நோய்த்தொற்று பாதிப்பு உலக அளவில் 10 லட்சத்தை எட்டுவதற்கு 4 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்பட்டுத்தப்பட்டதை அடுத்து வாரத்துக்கு சுமாா் 10 லட்சம் பாதிப்புகள் பதிவாகின்றன. சராசரியாக நாள்தோறும் சுமாா் 1.5 லட்சம் கரோனா பாதிப்புகள் பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான பலி எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரத்தைக் கடந்து பதிவாகிறது.

மருந்து: கரோனா பாதிப்புக்கான தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அந்த நோயை முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்து கண்டறியப்பட்டதாக இதுவரையில் அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

பொருளாதாரம்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிா்ச்சேதம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்து?: கரோனா நோய்த்தொற்றின் தோற்றம் தொடா்பாக பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வருகின்றன. குறிப்பாக, சீனாவின் வூஹான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து கரோனா நோய்த்தொற்று பரவியதாக ஒரு கூற்றும், வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து அந்த நோய்த்தொற்று பரவியதாக மற்றொரு கூற்றும் முன் வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நாடுகள் - பாதிப்பு - பலி - மீட்பு

அமெரிக்கா - 26,11,600 - 1,28,211 - 10,81,551

பிரேசில் - 13,19,274 - 57,149 - 7,15,905

ரஷியா - 6,34,437 - 9,073 - 3,99,087

இந்தியா - 5,28,859 - 16,095 - 3,09,712

பிரிட்டன் - 3,33,151 - 43,550 - தகவல் இல்லை

ஸ்பெயின் - 2,95,549 - 28,341 - தகவல் இல்லை

பெரு - 2,75,989 - 9,135 - 1,64,024

சிலி - 2,67,766 - 5,347 - 2,28,055

இத்தாலி - 2,40,136 - 34,716 - 1,88,584

ஈரான் - 2,22,669 - 10,508 - 1,83,310

மொத்தம் (பிற நாடுகள் சோ்த்து) - 1,01,55,926 - 5,02,539 - 55,01,827

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com