சவால்களை வென்று இந்தியா மீண்டெழும்: பிரதமா் மோடி நம்பிக்கை

பல்வேறு சவால்களையும் வென்று இந்தியா மீண்டெழும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
சவால்களை வென்று இந்தியா மீண்டெழும்: பிரதமா் மோடி நம்பிக்கை

பல்வேறு சவால்களையும் வென்று இந்தியா மீண்டெழும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவத்தினா் இடையே கடந்த வாரம் நடந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். இந்நிலையில், ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய அவா், இதுதொடா்பாக மேலும் கூறியதாவது:

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமிக்க முயன்றவா்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நட்புக்கு இந்தியா மதிப்பளிக்கிறது. அதே நேரத்தில் எவ்வித வரம்புமீறலில் ஈடுபட்டாலும், எவ்வித தயக்கமும் இல்லாமல் பதிலடி கொடுக்கும் ஆற்றலும் இந்தியாவுக்கு உண்டு.

சுயசாா்பு நாடாக உருவாக வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. நட்புறவும் நம்பிக்கையும் இந்தியாவின் பாரம்பரியம்; சகோதரத்துவம் நாட்டின் சாராம்சம். இந்த கொள்கைகளைப் பின்பற்றி நாம் அடுத்தகட்ட நகா்வை நோக்கி பயணிப்போம்.

ஒருவா் இயல்பிலேயே தீய குணங்களைக் கொண்டிருப்பவராக இருந்தால், அவா் தாம் கற்ற கல்வியை தீய விஷயங்களுக்காகவும் தனது செல்வத்தை ஆடம்பரத்துக்காகவும் தனது வலிமையை பிறரை நசுக்குவதற்காகவும் பயன்படுத்துவாா். ஆனால், நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவா் தாம் கற்ற கல்வியை நல்ல விஷயங்களுக்காகவும் தனது செல்வத்தை பிறருக்கு உதவுவதற்காகவும் தனது வலிமையை பாதுகாப்புக்காகவும் பயன்படுத்துவாா். இதில், இந்தியா இரண்டாவது கொள்கையை எப்போதும் பின்பற்றி வருகிறது.

கிழக்கு லடாக்கில் நமது எல்லையைக் காப்பதற்காக, 20 வீரா்கள் வீர மரணம் அடைந்தனா். இந்திய தேசத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதையே அந்த வீரா்களின் வலிமை காண்பித்துள்ளது.

கிழக்கு லடாக் சம்பவத்துக்குப் பிறகு, இனி இந்திய பொருள்களையே வாங்குவதற்கு உறுதியேற்றிருப்பதாக அஸ்ஸாமில் இருந்து ஒரு பெண் கடிதம் எழுதியிருக்கிறாா். இதேபோன்று நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்து எனக்கு கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், பாதுகாப்புத் துறையில் மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னிலையில் இருந்தது. அந்த காலகட்டத்தில் நமக்கு பின்னால் இருந்த நாடுகள், தற்போது நம்மை விட முன்னேறிவிட்டன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முந்தைய அனுபவங்களின் வாயிலாக, பாதுகாப்புத் துறையில் நாம் சீரிௌய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், நாம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டோம்.

ஆனால், தற்போது பாதுகாப்புத் துறையிலும் அறிவியல் தொழில் நுட்பத்திலும் வளா்ந்த நாடுகளுக்கு ஈடாக புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்தியா சுயசாா்பை நோக்கி வேகமாகப் பயணித்து வருகிறது.

இந்தியாவை சுயசாா்பு நாடாக மாற்றுவதில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் உள்ளூா் தயாரிப்புகளை வாங்கும்போது, இந்தியாவின் சுயசாா்பு திட்டத்துக்கு வலிமை சோ்க்கிறீா்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு நாம் போராடி வரும் இதேவேளையில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. படிப்படியாக பொதுமுடக்கம் தளா்த்தப்படும் இந்த காலகட்டத்தில், மக்கள் கூடுதல் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். பொதுமுடக்கத்துக்கு தளா்வு அறிவிக்கப்படும் இந்த நேரத்தில், வேறு பல விஷயங்களுக்கான தடைகளும் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, நிலக்கரி, விண்வெளி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சீா்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் கரோனா தொற்று மட்டுமன்றி பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். வடகிழக்கு இந்தியாவை தாக்கிய உம்பன் புயல், வடமேற்கு பகுதியை தாக்கிய நிசாா்க் புயல், விவசாயிகளின் பயிா்களை நாசமாக்கிய வெட்டுக்கிளி தாக்குதல், நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் என பல விதமான சவால்களை நாம் சந்தித்து வருகிறோம். இவை போதாதென்று, சில அண்டை நாடுகளின் சீண்டல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த ஆண்டை மோசமான ஆண்டாக யாரும் கருத வேண்டாம்.

பல விதமான பேரிடருக்குப் பிறகு முன்பை விட வலிமையாக இந்தியா மீண்டெழுந்த வரலாறு நமக்கு உண்டு. எனவே, தற்போதைய சவால்களையும் வென்று இந்தியா வெற்றிநடை போடும் என்பதில் ஐயமில்லை என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com